காமெடி நடிகர் போண்டா மணியிடம் ரூ.1லட்சம் ஏமாற்றி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் விஜிஎன் நகரில் குடும்பத்துடன்
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி வசித்து வருகிறார். கடந்த மாதம் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது ரசிகர் என்று கூறி, திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி என்ற ஊரை சேர்ந்த ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் உடல் நலம் விசாரிப்பது போல உடன் பழகி வந்தார். மருத்துவமனையில் போண்டா மணிக்கு சிறிய உதவிகளையும் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி மருத்துவமனையில் இருந்து போண்டா மணி
டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தார். அவருடன் ராஜேஷ் பிரித்தீவ்வும் உடன் வந்துள்ளார். அப்போது போண்டா மணியின் மனைவி மாதவி தனது கணவரின் ஏடிஎம் கார்டை ராஜேஸ் பிரித்தீவ்விடம் கொடுத்து மருந்து வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
மருந்து வாங்கி வர ராஜேஸ் பிரித்தீவ் சென்ற சிறிது நேரத்தில் சென்னை உம்முடி
பங்காரு நகைக் கடையிலிருந்து மாதவியின் செல்போனுக்கு ரூ.1,04,941 மதிப்புள்ள
நகை வாங்கியதாக மெசேஜ் வந்துள்ளது. இதையடுத்து ராஜேஷ் பிரத்தீவ் தலைமறைவாகி விட்டார். அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இது குறி்தது போண்டா மணியின் மனைவி போரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார்
வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் நேற்று ராஜேஸ் பிரத்தீவ்வை
கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தினேஷ். சிவராம
குரு, தீனதயாளன், ராஜேஷ், பெருமாள் என பல்வேறு பெயர்களில் பல ஊர்களில்
மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர் மீது கோவை மாவட்டம்
கருமத்தூர், கோவை இரயில்வே போலீஸ், சென்னை எழும்பூர் உள்ளிட்ட பல காவல்
நிலையங்களில் இவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய
வந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.








