வயநாடு டூ டெல்லி கேபிடல்ஸ்… மகளிர் ஐபிஎல்லில் சாதிக்கவுள்ள கேரள பழங்குடி பெண்!

கேரள பழங்குடியின பெண், மகளிர் ஐபிஎல் போட்டிக்காக டெல்லி கேபிடல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். மகளிருக்கான ஐபிஎல் நடப்பாண்டு முதல் தொடங்க உள்ளது. இதற்கான ஏலம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் டெல்லி கேபிடல்ஸ்…

கேரள பழங்குடியின பெண், மகளிர் ஐபிஎல் போட்டிக்காக டெல்லி கேபிடல்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

மகளிருக்கான ஐபிஎல் நடப்பாண்டு முதல் தொடங்க உள்ளது. இதற்கான ஏலம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி கேரளாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மின்னு மணியை ரூ.30 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது. மின்னு மணி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். குறிச்சியா என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த மின்னுவின் தந்தை மணி கூலித் தொழிலாளி ஆவார்.

சிறுவயதிலேயே சகோதரர்கள், நண்பர்களுடன் இணைந்து வயல்வெளியில் கிரிக்கெட் ஆட தொடங்கியவர் மின்னு. இடப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தவுடன்  கிரிக்கெட் அவர் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இவரின் திறமையை கண்டு உடற்பயிற்சி ஆசிரியர் நன்கு ஊக்குவிக்க தொடங்கினார். வயநாடு மாவட்ட அளவில் நடந்த 13 வயதுக்குட்பட்ட அணியில் அவரை சேர்த்துள்ளார். ஆனால் அதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து மின்னு கூறுகையில், “தந்தைக்கு சரியான பணி இல்லாததால், அவர்கள் இதை வேண்டாம் என்றே சொன்னார்கள். கிரிக்கெட் என்றாலே ஆண்களுக்கான விளையாட்டு என்றார்கள். மிகவும் வற்புறுத்தித்தான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். படிப்படியாக மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றேன். அது அவ்வளவு எளிதாக அமையவில்லை. என் வீட்டில் இருந்து பயிற்சி மையத்துக்கு செல்ல 1.30 மணி நேரத்துக்கு மேலாகும். காலை 4 மணிக்கே எழுந்து அம்மா, அப்பா உதவி செய்வார்கள்.

நேரடி பேருந்து கிடையாது. 4 பேருந்துகள் மாற வேண்டும். பிறகு பயிற்சி முடித்து வர இரவு 8 மணியாகிவிடும். நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் அப்பா அந்த செலவுகளை எல்லாம் சமாளித்தார். நான் கிரிக்கெட் மூலம் சம்பாதிக்க தொடங்கிய பிறகு தான் கடன்களை எல்லாம் அடைத்து சிறிதாக வீடு கட்டினோம். அதுவும் மழை வெள்ளத்தில் சேதமடைந்துவிட்டது.

என் வாழ்வில் ரூ.30 லட்சத்தை எல்லாம் பார்த்ததே இல்லை. என் உணர்வுகளை வார்தைகளால் விவரிக்க முடியாது. எங்களுக்காக ஒரு வீடு கட்ட இதன் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைவருக்கு நன்றி.” என கூறியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.