மே 4-ம் தேதி உலக கடவுச்சொல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் ட்விட்டரில் மீம்ஸ்களை பகிர்ந்து கடவுச்சொல் தினத்தை கொண்டாடிவருகின்றனர்.
உலகப் புகழ் பெற்ற தொழில் நுட்ப நிறுவனமான இண்டெல் இந்த கடவுச்சொல் தினத்தை அறிமுகப்படுத்தியது. மே மாதத்தின் முதல் வியாழன் உலக கடவுச்சொல் தினமாக அறிவிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக கொண்டாடப்பட்டது. உலக கடவுச்சொல் தினம் வலுவான கடவுச்சொற்களின் முக்கியத்துவம் மற்றும் சில வாரங்களுக்கு ஒருமுறை தங்கள் கடவுச்சொற்களை ஏன் மாற்ற வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காக உருவாக்கப்பட்டது. வலுவான கடவுச்சொற்களை உருவாக்குவது சவாலானது தான் என்றாலும், அதை நினைவில் கொள்வது பலருக்கும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது.
நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங், வெட்கத்துடன் அக்ஷய் குமார் சிரிக்கும் பிரபலமான மீம் டெம்ப்ளேட்டை பகிர்ந்துள்ளார். அதில் “இந்த #உலக பாஸ்வேர்டு தினத்தில், உங்கள் கடவுச்சொல் ’GirlfriendName123@’ என பதிவிடவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆம் எனில், இன்றே மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் கடவுச்சொல்லைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்” என்று அவர் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் டெல்லி காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் “மெட் காலா நிகழ்வின் உடைகளைப் போல் உங்கள் கடவுச்சொல்லை வழக்கத்திற்க்கு மாறாக வைத்துக் கொள்ளுங்கள்” என பகிர்ந்துள்ளனர்.
இதே போல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுளும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் மீம்களை பகிர்ந்துள்ளனர். இது போல மேலும் பல நெட்டிசன்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் மீம்களை பகிர்ந்து உலக கடவுச்சொல் தினத்தை கொண்டாடிவருகின்றனர்.
வலுவான கடவுச்சொல் இருந்தாலும், சில வாரங்களுக்கு ஒருமுறை அல்லது மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதே இந்த உலக கடவுச்சொல் தினத்தின் குறிக்கோளாகும்.







