உலக தர வரிசையில் இடம்பெற்ற கடைசி விவசாயி, விக்ரம் திரைப்படங்கள்

உலக திரைப்படங்களை தர வரிசைப்படுத்தும் letterboxd இணையதளம் 2022 ஆண்டின் முதல் பகுதியில் வெளியான சிறந்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழில் வெளிவந்த கடைசி விவசாயி இரண்டாம் இடத்தையும், விக்ரம் 11வது இடத்தையும்…

உலக திரைப்படங்களை தர வரிசைப்படுத்தும் letterboxd இணையதளம் 2022 ஆண்டின் முதல் பகுதியில் வெளியான சிறந்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழில் வெளிவந்த கடைசி விவசாயி இரண்டாம் இடத்தையும், விக்ரம் 11வது இடத்தையும் பிடித்துள்ளது.

சமீப காலமாக தமிழ் சினிமாவின் தரம் குறைந்துவிட்டதாகவும் டப்பிங் திரைப்படங்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் பலர் குற்றம் சாட்டினர். குறிப்பாக சிறு பட தயாரிப்பாளர்கள் சினிமா விமர்சகர்கள் இந்த குற்றாச்சாட்டை முன்வைத்தனர். அதற்கு ஏற்ப 2022 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் வெளியான திரைப்படங்களில் பெரும்பாலும் லாஜிக்கல் மிஸ்டேட், கதையில் கவனம் செலுத்தாமல் பல குறைகள் இருந்தது. ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே தமிழ் சினிமாவின் தரம் குறையாமல் பார்த்துக்கொண்டது.  அப்படி வெளியான படங்களுக்கு அங்கிகாரம் கிடைக்கும் வகையில் உலக திரைப்படங்களை தர வரிசைப்படுத்தும் இணையதளமான letterboxd தளம் 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியான 25 சிறந்த திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தமிழின் முக்கிய திரைப்படங்களும் இடம் பெற்றிருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது. letterboxd இணையதளம் வெளியிட்டுள்ள 25 சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் Everything Everywhere All at Once என்ற திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தை Daniel Kwan மற்றும் Daniel Scheinert இயக்கி உள்ளனர்.

இரண்டாம் இடத்தை கடைசி விவசாயி திரைப்படம் பிடித்துள்ளது. விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். விவசாயியாக நடித்திருந்த நல்லாண்டியின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் இப்பட்டியலில் 11வது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் வெளியாகி 30 நாட்களில் உலகம் முழுவதும் 450 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 2022 முதல் பாதியில் வெளியான படங்களில் அனைவரது பாராட்டையும் பெற்ற படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.