முக்கியச் செய்திகள் விளையாட்டு

மீண்டும் வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா – உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா மற்றும் ரோஹித் யாதவ் கலந்து கொண்டிருக்கின்றனர். தகுதி சுற்றில் சிறப்பாக செயல்பட்டதால், இருவரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இந்நிலையில் இறுதிப் போட்டி இன்று நடந்தது. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளைப் பொறுத்தவரை, இதற்கு முன்பு இந்தியா சார்பில் அஞ்சு பாபி ஜார்ஜ் (நீளம் தாண்டுதல்) பதக்கம் வென்றிருக்கிறார். வேறு யாரும் பதக்கம் வென்றதில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியிருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியிலும் நீரஜ் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். இதன் காரணமாக நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்ஸை போன்று மீண்டும் ஒரு சாதனையை படைப்பார் என்று அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். முதல் வாய்ப்பிலேயே நீரஜ் சோப்ராவுக்கு ஃபவுல் ஆனது. அதேநேரத்தில் நடப்பு சாம்பியானான ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதல் இரண்டு வாய்ப்புகளில் 90.12 மீ மற்றும் 90.46 மீ தொலைவுக்கு வீசி அசத்தினார்.

நீரஜ் தன் இரண்டாவது வாய்ப்பில் 82.39 மீ, மூன்றாவது வாய்ப்பில் 86.37 மீ தொலைவுக்கு வீசினார். ஆண்டர்சன் தனது மூன்றாவது வாய்ப்பில் 87.21 மீ தூரம் வீசினார். இதனால், ஆண்டர்சன் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்க வைத்தார். நீரஜ் நான்காம் இடத்தில் இருந்தார். ரசிகர்கள் சோகத்தில் மூழ்கிய அந்தத் தருணத்தில், நீரஜ் தன் நான்காவது வாய்ப்பில் 88.13 மீ தூரம் வீசி அசத்தினார். இதன் மூலம் அவர் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்தியாவின் மற்றொரு வீரரான ரோஹித் 10வது இடத்தைப் பிடித்தார்.

உலக தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லும் இரண்டாவது இந்தியர் நீரஜ் சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அஞ்சு பாபி ஜார்ஜ் கடந்த 2003ம் ஆண்டு வெண்கலம் வென்றிருந்தார். இந்த வெற்றி மூலம் உலக தடகளப் போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் நீரஜ் பெற்றிருக்கிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பதக்கம் இல்லாத ஏக்கத்தை நீக்கிய, நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

Web Editor

இந்தியாவில் முதல் முறையாக லாவண்டர் திருவிழா!

EZHILARASAN D

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

EZHILARASAN D