ஊதியம் இல்லாமல் அதிக நேரம் உழைக்கும் பெண்கள் – மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு வலு சேர்க்கும் ஆய்வுகளை வெளியிட்ட ஐஐஎம்

மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள நிலையில் குடும்பங்களில் பெண்களின் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கின்றனவா என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு. ஒரு பள்ளி மாணவனிடம் உனது பெற்றோர் என்ன செய்கிறார்கள்…

மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள நிலையில் குடும்பங்களில் பெண்களின் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கின்றனவா என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு.

ஒரு பள்ளி மாணவனிடம் உனது பெற்றோர் என்ன செய்கிறார்கள் என்று கேட்டால் தந்தை பணியாற்றுகிறார் தாய் வீட்டில் சும்மா இருக்கிறார் என பதில் வரும். இதேபோல ஒரு கணவனின் உங்கள் மனைவி என்ன செய்கிறார் என கேட்டுப் பாருங்கள் வீட்டில் சும்மா இருக்கிறார் என அழுத்தம் திருத்தமாக சொல்வார்கள்.

வீட்டில் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்பது பொதுப் புத்தியில் பசுமரத்தாணிபோல் பதிவாகியுள்ளது. குடும்பத்தில் ஆணுக்கு நிகராகவோ அல்லது ஆணை விட கூடுதலாகவே தான் பெண்கள் தங்கள் உழைப்பை தருகிறார்கள். இதற்கு எந்தக் கூலியோ, ஊதியமோ, பிஎஃப், இன்சூரன்ஸ் போன்ற எந்த பலனுமே இல்லை மாறாக வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்கிற பெயர் மட்டுமே கிடைக்கிறது.

சமீபத்தில் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. குடும்பமாக வாழும் ஆணும் பெண்ணும் தங்களின் வீட்டு வேலைகளில் எவ்வளவு தூரம் பங்களிப்பு செலுத்துகிறார்கள் என்கிற ஆய்வுதான் அது. இந்த ஆய்வின் முடிவுகளின் படி குடும்ப வேலைகளில் பெண்கள் ஒருநாளில் கிட்டத்தட்ட 7.2 மணி நேரம் ஈடுபட்டால் ஆண்கள் வெறுமனே 2.8 மணி நேரம் மட்டுமே ஈடுபடுவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வின் போது 15 முதல் 60 வயது பெண்களை இந்திய மேலாண்மைக் கழகம் தேர்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் ஒரு நாளில் 7.2 மணி நேரம் வேலை செய்வது குடும்ப பெண்கள் மட்டுமல்ல மாறாக வேலைக்கு செல்லும் பெண்களும் அலுவலங்களில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தும் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகையை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது மகளிருக்கான உதவித் தொகை அல்ல. மாறாக மகளிரின் உரிமைத் தொகை என தெரிவித்தார். இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகைக்கு வலு சேர்க்கும் வகையில் அகமதாபாத் இந்திய மேலாண்மைக் கழகத்தின் ஆய்வுகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.