மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இமாச்சல் மற்றும் கர்நாடக தேர்தல் முடிவுகளே அதற்கு மிகச் சிறந்த சான்று என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காங்கிரஸ் தலைவராக மல்லிகாா்ஜுன காாகே தோந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி, 84 உறுப்பினா்களைக் கொண்ட செயற்குழு கடந்த மாதம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. பெரும்பாலும் காங்கிரஸ் செயற்குழு டெல்லியில் நடைபெறும் நிலையில், இம்முறை ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தெலுங்கானாவில் CWC கூட்டத்தை நடத்துவது, தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் கட்சியின் பிரச்சாரத்தை உயர்த்துவதற்கான ஒரு முயற்சியாகவும், இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிஆர்எஸ் அரசாங்கத்தை அகற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்ற தெளிவான செய்தியை அனுப்புவதாகவும் கருதப்படுகிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதலமைச்சர் பூபேஷ் பகேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:
“வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே கட்சியின் நோக்கமாக இருக்க வேண்டும். பாஜக தலைமையிலான மத்திய அரசை பதவியிலிருந்து கீழிறக்க வேண்டும். புதுப்புது பிரச்னைகளை கொண்டு வந்து மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு கவனம் கொடுக்காமல் அவர்கள் திசை திருப்பி வருகிறார்கள். மோடி தலைமையிலான அரசு ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக குழு ஒன்றை அமைத்துள்ளது.
அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மரபுகளை மறந்து முன்னாள் குடியரசுத் தலைவரையும் அந்தக் குழுவில் இடம்பெற செய்துள்ளனர். சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 2-3 மாதங்களில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுமானால் நாம் அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஹிமாசல் மற்றும் கர்நாடக தேர்தல் முடிவுகளே அதற்கு மிகச் சிறந்த சான்று. நமது தனிப்பட்ட விருப்பங்களை புறந்தள்ளி கட்சியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். மோடி தலைமையிலான அரசு ஏழை மக்களின் பிரச்னைகளை கண்டுகொள்ளவில்லை. அவர்களை வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்துவதையே நமது நோக்கமாக கொள்ள வேண்டும். இந்த சர்வாதிகார அரசை நீக்கி ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.







