சென்னையில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்ததாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சேலையூரை சேர்ந்தவர் பூபதி. இவர் இன்று மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டெல்லா என்பவர், தான் ஒரு வழக்கறிஞர் எனவும் தனக்கு அரசியல் வட்டாரங்களில் பலரை தெரியும் என கூறி தன்னிடம் அறிமுகம் ஆனதாகவும், இதைத்தொடர்ந்து, மாநகராட்சியில் நிரந்தர பணி பெற்றுத்தருவதாக கூறி தன்னிடம் இருந்து 5 லட்சம் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன்பின் தனக்கு பணியும் பெற்றுத்தரவில்லை, கொடுத்த பணத்தை திருப்பித்தராமல் தன்னை ஏமாற்றி வருவதாக அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை சுமார் 35 நபர்களிடம் ஒரு கோடியே 18 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வரை வேலை வாங்கி தருவதாக அவர் ஏமாற்றி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு பணம் அனுப்பிய வங்கி எண்ணை பெற்ற போலீசார் அதை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று அவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரொக்கமாக ரூ.90 ஆயிரம் மற்றும் 11 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.







