அகர்கர் வருகை இந்திய அணியில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்திய டி20 அணியில் சீனியர்களுக்கான வாய்ப்பு கடினம் என தெரியவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜித் அகர்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரது வருகையை அடுத்து, சிக்கலான சூழலில் இருக்கும் இந்திய அணியின் தேர்வு குறித்து இனியாவது தெளிவு கிடைக்கப் பெரும் என்ற மாபெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போலவே அகர்கர் வருகையை அடுத்து, மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அறிவிக்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக டி20 அணியானது அவரது தலைமையின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, 2024 டி20 உலகக் கோப்பையை மையமாக கொண்டு அந்த அணியானது அறிவிக்கப்பட்டது
அதில் சீனியர் பிளேயர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி ஆகியோருக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் படையாக களமிறங்கும் இந்திய அணி, இதே போல தான் இனி அடுத்த டி20 உலகக் கோப்பை வரை பயணிக்கும் என கூறப்படுகிறது.
எனவே இனி இந்திய டி20 அணியை பொறுத்தவரை, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கு பின்னர், விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா மற்றும் சமி ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே பிசிசிஐ நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது முடிந்துள்ள நிலையில், ஆசிய போட்டிகளுக்காக இரண்டாம் நிலை இந்திய அணியை தேர்வு செய்து அனுப்ப திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது
எனவே டி20 போட்டிகளுக்கான இந்திய அணியை புதிய பரிமாணத்தில் உருவாக்கி, அடுத்தகட்ட நகர்வுகளுக்கு கொண்டு செல்ல சீனியர் வீரர்களுக்கான இடங்களை, இளம் வீரர்களுக்கு வழங்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே இனி இந்த 5 முக்கிய வீரர்களின் வாய்ப்பு, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் மட்டுமே பங்களிப்பாக இருக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றினால், ஹர்திக் பாண்டியா இனி இந்திய டி20 அணியின் முழு நேர கேப்டனாக செயல்படுவார் எனவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







