காங்கிரஸில் இருந்து வெளியேறுகிறாரா சச்சின் பைலட்? வெளியான பரபரப்பு தகவல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் உட்கட்சி மோதல் அதிகரித்த நிலையில், காங்கிரஸில் இருந்து வெளியேற சச்சின் பைலட் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ராஜஸ்தானில் முந்தைய பாஜக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சர்…

ராஜஸ்தான் மாநிலத்தில் உட்கட்சி மோதல் அதிகரித்த நிலையில், காங்கிரஸில் இருந்து வெளியேற சச்சின் பைலட் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ராஜஸ்தானில் முந்தைய பாஜக அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் அசோக் கெலாட் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி கடந்த மாதம் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஈடுபட்டார். தற்போது இதே கோரிக்கையை முன்வைத்து 125 கி.மீ. தூர நடைப்பயணத்தை கடந்த வியாழக்கிழமை அவர் தொடங்கியுள்ளார்.

சச்சின் பைலட் கட்சியில் இருந்து விலகுவது குறித்து அவரிடம் கேட்டபோது, ​​“ஊகங்கள் தேவையில்லை. நான் எதைச் சொன்னாலும் செய்தாலும் அதை வெளிப்படையாகவே செய்வேன். நான் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடவில்லை. எனது கோரிக்கை கருத்தியல் சார்ந்தது, தனிப்பட்டது அல்ல. பதவிக்காக நான் ஆசைப்படுகிறேன் என்று யாரும் குற்றம் சொல்ல முடியாது. எனது அரசியல் அனைவருக்கும் தெரியும்” என்று கூறினார்.

https://twitter.com/ANI_MP_CG_RJ/status/1656692905929736196

மேலும் அஜ்மீரில் தனது ஆதரவாளா்கள் மத்தியில் சச்சின் பைலட், இந்த நடைப்பயணம் யாருக்கும் எதிரானதல்ல. நாட்டின் பிரச்னைகளுக்கு எதிரானது. இது காங்கிரஸ் கட்சியின் நடைப்பயணம் அல்ல. தனிப்பட்ட முறையிலானது. முந்தைய அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கும் தோ்தலின்போது உறுதி அளித்தோம். ஆனால் தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு எதுவும் நடைபெறவில்லை” என்றாா்.

சச்சின் பைலட்டின் இந்த திடீா் நடைபயணம் குறித்து, காங்கிரஸ் தலைமை டெல்லியில்  இன்று முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது. இந்த கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவா் கோவிந்த் சிங் தோடாசாரா, இணை பொறுப்பாளா்கள் குவாஜி முகமது நிஜாமுதீன், அம்ருதா தவன், வீரேந்திர ரத்தோா் ஆகியோா் பங்கேற்க உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.