மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏன் ரகசியமாக கொண்டுவரப்பட்டது என மக்களவையில் கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனைத் தொடர்நது மகளிர் மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அதில் பல்வேறு தலைவர்கள் பேசி வருகின்றனர். 
மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவாதத்தின் மீது திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது..
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் பாஜக அரசியலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மகளிர் மசோதாவை தாக்கல் செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம்?. மேலும் இது ரகசியமாக கொண்டுவரப்பட்டுள்ளது. எந்த அரசியல் கட்சிகளுடனும் இது குறித்து ஆலோசிக்கவில்லை. எதற்காக சிறப்புக் கூட்டத்தொடர் என்று கூறவில்லை, அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இந்த மசோதா குறித்து பேசவில்லை, எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தெரிவிக்கவில்லை.
இந்தியாவிலேயே முதல் முறையாக 1921 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டு பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது நீதிக்கட்சி. நாட்டிலேயே பெண் ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது 1927ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தான். கடந்த 100 ஆண்டுகளாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படவில்லை.
1996-ல் திமுக அரசு ஆதரவுடன் மத்தியில் மகளிர் மசோதா கொண்டுவரப்பட்டது. 2010ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாநிலங்களவையில் இதனை நிறைவேற்றியது.
2010ல் மாநிலங்களவையில் இந்த மசோதா குறித்துப் பேசினேன். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த மக்களவையில் அதே மசோதா குறித்துப் பேசி வருகிறேன்.
2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த மசோதாவை நிறைவேற்றக்கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார்கள். இதற்காக திமுக டெல்லியில் பேரணி நடத்தியுள்ளது.
இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.
முன்னதாக கனிமொழி பேசத் தொடங்கியபோது பாஜக எம்பிக்கள் இந்தியில் கூச்சலிட்டனர். அதற்கு பதிலளித்த கனிமொழி இந்தியில் கூச்சலிட்டால் எனக்கு புரியாது. பேசத் துவங்குவதற்கு முன்பே கூச்சலிடுவது தான் பாஜக பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையா? என கேள்வி எழுப்பினார்.







