மகளிர் மசோதா ராஜீவ் காந்தியின் கனவு திட்டம்: மக்களவையில் சோனியா காந்தி பேச்சு!

மகளிர் மசோதா நிறைவேறினால் தான் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் கனவு நிறைவடையும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும்…

மகளிர் மசோதா நிறைவேறினால் தான் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் கனவு நிறைவடையும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனைத் தொடர்நது மகளிர் மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அதில் பல்வேறு தலைவர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில் காஙகிரஸ் சார்பில் சோனியா காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது :

இது எனது வாழ்க்கையின் உணர்ச்சிகரமான தருணம். உள்ளாட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் அரசியல் சட்டத் திருத்தத்தை முதன்முறையாக ராஜீவ் காந்தி கொண்டு வந்தார். ஆனால் 7 வாக்குகள் வித்தியாசத்தில் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டது.

பின்னர், அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றியது. இதன் விளைவாக, உள்ளாட்சி அமைப்புகள் மூலம், நாடு முழுவதும், 15 லட்சம் பெண்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். ராஜீவ் காந்தியின் கனவு ஓரளவு மட்டுமே நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேறியவுடன் அது முழுமையாக நிறைவடையும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் சார்பில் நான் ஆதரிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது. பல்வேறு துறைகளில் அவர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி SC, ST, OBC சமூகப் பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அது இந்தியப் பெண்களுக்கு அநீதி இழைக்கும். கடந்த 13 ஆண்டுகளாக இந்தியப் பெண்கள் தங்கள் அரசியல் பொறுப்புகளுக்காகக் காத்திருக்கிறார்கள். எனவே காலதாமதம் இன்றி மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.