கோவையில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் என்ற நவீன நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “நம் திமுக ஆட்சியில் ரூ.290 கோடி மதிப்பில் கோவையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையம் இன்று திறக்கப்படுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த மாபெரும் அறிவுச்சுரங்கத்தை கோவை வாழ் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வாழ்த்துகிறோம்.
வழக்கமாக திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்பவர்கள், இந்த முறை பெரியார் அறிவுலகத்தில் ’நான் முதல்வன்’என்ற பெயரின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்து இருக்கிறார்கள். இந்த CM-இன் Sticker ஆட்சியில், நான் முதல்வன் திட்டத்தைச் சிதைத்ததோடு மட்டுமின்றி, அதன் பெயரைக்கூட ஏற்க மனமில்லை என்றால் என்ன காரணம்? ‘முதல்வன்’ என்று சொன்னாலே திமுகதலைவர் பெயர் தான் நினைவுக்கு வருகிறதா? இல்லை, நம் மாணவர்கள் அவரவர் துறையில் முதல்வர்கள் ஆவது பிடிக்கவில்லையா?
திமுக அரசு சூட்டிய பெயர்களை மறைப்பது – திட்டங்களை Cancel செய்வது – Cancel செய்தவற்றையே Cancel செய்து U-Turn அடிப்பது என்று Circus நடத்தாமல் மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை இந்த முதலமைச்சர் நடத்த வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




