தற்காலிக ஆசிரியரை நியமிக்க ஏன் இந்த அவசரம்?-உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

தற்காலிக ஆசிரியரை நியமிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைகால தடையை நீக்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தற்காலிக ஆசிரியரை நியமிப்பதற்கு என்ன அவசரம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே…

தற்காலிக ஆசிரியரை நியமிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைகால தடையை நீக்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தற்காலிக ஆசிரியரை நியமிப்பதற்கு என்ன அவசரம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதுதாெடர்பான முந்தைய விசாரணையில் தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப இடைக்கால தடை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைகாலத் தடையை நீக்கக் கோரி தமிழக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு முறையீடு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வரம்புக்கு உட்பட்ட மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய முடியாமல் உள்ளது என்று அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரமேஷ், “எந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறது” என கேள்வி எழுப்பினார்.

அரசு தரப்பு வழக்கறிஞர், TET முடித்தவர்கள் மற்றும் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

“அப்படி என்றால் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கலாமே?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். “தற்காலிக ஆசிரியரை நியமிப்பதற்கு என்ன அவசரம் உள்ளது” எனக் கூறி வழக்கு பட்டியலிடப்பட்ட ஜூலை 8 ஆம் தேதியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி ரமேஷ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.