இலங்கையின் குருநாகலிலுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டது. அந்நாட்டில் உள்ள பல அமைச்சர்கள், எம்பிக்களை இல்லங்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றன. இப்படி மக்கள் ஆளும் அரசு மீது கோபம் கொள்வது ஏன் என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை. இலங்கையின் தற்போதைய நிலைய ஸ்கேன் பிடித்து காட்டும் ஓர் ரிப்போர்ட்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் உணவு பஞ்சம் அந்நாட்டில் தலைவிரித்தாட தொடங்கி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. உணவு தானிய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சீர் செய்ய வேண்டிய ஆளும் அரசு, போராடும் மக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தி தங்கள் வெறியாட்டத்தை தீர்த்தன. இதன் விளைவே பிரதமரின் இல்லம், அமைச்சர்கள் வீடுகள் என ஆளுங்கட்சி பிரமுகர்களின் சொத்துக்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. இவ்வளவு சீர்கேட்டிற்கும் காரணம், ராஜபக்சே குடும்பமே என இலங்கை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சூழ்நிலை ஏற்பட காரணம் இலங்கையில் மூன்று முக்கிய தொழில்கள் முடங்கின.
இலங்கையின் நிலையான வருமானம் என்பது மூன்று தொழிலை சார்ந்துள்ளது. அவை, தேயிலை, ஆடை உற்பத்தி மற்றும் சுற்றுலா. இவற்றில் ஒன்றன்பின் ஒன்றாக சரிவாக சந்திக்க தொடங்கின. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் கொரோனாவில் தாக்கம் அதிகம் ஏற்படத்தொடங்கியதால், சர்வதேச விமான போக்குவரத்து சேவை அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாத்தொழில் முழுமையாக முடங்கியது. இதன்தொடர்ச்சியாக விமானசேவை இல்லாததால் மற்ற இரு தொழில்களும் மந்தநிலைக்கு சென்றன. இதன் எதிரொலியாக அந்நிய செலவாணி கடுமையாக குறைந்தது. இதன் காரணமாக இலங்கை தேவையான எந்த பொருளையும் இறக்குமதி செய்ய முடியாமல் சென்றுவிட்டதாக தெரிகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜ பக்சே அதிரடியாக வரிகளை குறைத்தார். இதனால் சர்வதேச சந்தையில் வெளிநாட்டு நாணயத்தை வாங்கும் அளவிற்கு பணம் கையிருப்பு இல்லாமல் சென்றது. 2021-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அந்நியச் செலாவணி, அதாவது அமெரிக்க டாலர் கையிருப்பு குறையத் தொடங்கியதும் ரசாயன உரங்கள் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டது. விவசாயிகள் அனைவரும் இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இது உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.
வேறு வழியில்லாமல் உணவு தானியங்களை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியதால் அந்நியச் செலாவணி கையிருப்பு இன்னும் குறைந்து போனது.பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருக்கின்றன. இவற்றை பணம் கொடுத்து வாங்கும் அளவுக்கு இலங்கை வங்கிகளிடம் டாலர் கையிருப்பில் இல்லை. அதாவது அந்நியச் செலாவணி கையிருப்பில் இல்லை. இதனால் இறக்குமதி தடைபட்டதால், பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைகள் கட்டுப்பாட்டை இழந்து உயரத் தொடங்கின. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு கோழித் தீவனம்கூட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது. சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு என முக்கியமான பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்திருக்கின்றன.
நாட்டின் முக்கியமான மின் உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்கக் கூடியவை என்பதால், அவையும் உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன. அல்லது மூடப்பட்டிருக்கின்றன. இது மிகப்பெரிய தொடர் மின்வெட்டிற்கு காரணமாக அமைந்துள்ளது.
இப்படி மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை களைய முற்படாமல், அரசிடம் நியாயம் கேட்டு போராடி வரும் மக்கள் மீது ராஜ பக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதுவே வன்முறை இலங்கை முழுவதும் பரவுவதற்கு காரணம் என கூறப்படுகிறது. மக்களின் கோபத்திற்கு ஆளுங்கட்சி புள்ளிகள் சொத்துக்கள் எதுவும் தப்பவில்லை. இதனை எப்படி கட்டுப்படுத்துவது எனத் தெரியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது. அரசியல் சார்பில்லாத பொருளாதார அறிஞர் ஒருவரை பிரதமராக நியமிக்கலாமா? இலங்கை அதிபர் யோசித்து வருவதாக தெரிகிறது.
இராமானுஜம்.கி
Advertisement: