ரஷ்யாவுக்கு எதிரான ஐநா வாக்கெடுப்பை இந்தியா ஏன் புறக்கணித்தது?

ரஷ்யா-உக்ரைன் மோதலைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் அதிருப்பதியடைந்துள்ளன. இதனையடுத்து இப்பிரச்னையை ஐநாவில் கொண்டு சென்று தீர்வு காண்பதென முடிவெடுக்கப்பட்டு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான…

ரஷ்யா-உக்ரைன் மோதலைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடும் அதிருப்பதியடைந்துள்ளன. இதனையடுத்து இப்பிரச்னையை ஐநாவில் கொண்டு சென்று தீர்வு காண்பதென முடிவெடுக்கப்பட்டு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. ஆனால் மூன்று தீர்மானத்தையும் இந்தியா புறக்கணித்தது.

கடந்த பிப் 27ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. முன்னதாக ஏற்கெனவே பிப்.25ல் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் என மொத்தம் மூன்று வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது.

ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்குமான நட்பு வரலாற்று பின்புலம் கொண்டதாகும். சுதந்திர இந்தியா முழுமையடைய ரஷ்யாவின் உதவி இன்றியமையததாக இருந்தது என்றால் அது மிகையல்ல. இந்த வரலாற்றின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முழுமையான இந்தியாவுக்கான சோவியத் ரஷ்யாவின் உதவி

1957ல் காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக மாறியபோது ஐநா படைகளை காஷ்மீரில் கொண்டு வந்து அப்பகுதியை ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பாகிஸ்தான் தீர்மானம் கொண்டு வந்த போது அப்போதைய சோவியத் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியாவுக்கு ஆதரவாக அந்த தீர்மானத்தையே தள்ளுபடி செய்தது.

இந்தியா சுதந்திரமடைந்தபோதும் கூட 1961 வரை கோவா போர்த்துக்கீசியர்கள் வசம் இருந்தது. அப்படியான சூழலில் இந்தியா கோவாவை தன்னுடன் இணைத்துக்கொள்ள முனைப்பு காட்டிக்கொண்டிருந்தது. ஆனால், போர்த்துகல் ஐநாவில் ஒரு தீர்மானத்தை முன்வைத்தது. அதில் இந்திய படைகள் கோவாவை விட்டு வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தது.

போர்த்துகல் நாட்டின் தீர்மானத்திற்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட ஆதரவு தெரிவித்து வாக்களித்தன. ஆனால் சோவியத் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்தது

1962ம் ஆண்டு சோவியத் ரஷ்யா 100வது முறையாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. இதில், ஐரிஷ் நாடானது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு வலியுறுத்தலை முன்வைத்தது. அதன் இந்தியாவும் பாகிஸ்தானும் கலந்து பேசி காஷ்மீர் பிரச்னையை முடித்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இந்த தீர்மானத்தை ரஷ்ய தள்ளுபடி செய்தது.

1965ல் இந்தியா-பாகிஸ்தான் போரின் போதும், 1971ம் ஆண்டு வங்கதேச போரின் போதும் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் ஐநாவில் எழுப்பியது. இரு முறையும் சோவியத் ரஷ்யா தனது அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்தது.

ஐநாவில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் 5 நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தன. அதில் ரஷ்யாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 6 முறை இந்தியாவுக்கு ஆதரவாக வீட்டோவை ரஷ்யா பயன்படுத்தியுள்ளது.

ஐந்தாண்டு திட்டம் மற்றும் ராணுவ ஆயுதங்கள்

இவைகளை தவிர்த்து இந்தியாவின் முதல் பிரதமாரக பொறுப்பேற்ற நேரு, சோவியத் ரஷ்யாவின் வளர்ச்சியை பார்த்துதான் இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்களை (1951-56) கொண்டு வந்தார்.

சுதந்திர இந்தியாவில் ராணுவ கட்டமைப்பை மேம்படுத்த சோவியத் ரஷ்யா செய்த ராணுவ தளவாட உதவிகள் அளப்பறியவை. தற்போது இந்திய விமானப்படையில் திறம்பட செயலாற்றிக்கொண்டிருக்கும் மிக்-25 போர் விமானம் சோவியத் ரஷ்யாவிடமிருந்து வாங்கியவைதான்.

தற்போது ராணுவ தளவாடங்கள் இறக்குமதி வெகுவாக குறைந்திருந்தாலும் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறியும் ரஷ்யாவிடமிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் s-400 ஏவுகணையை இந்தியா சமீபத்தில் வாங்கியது. இதிலிருந்து ரஷ்யா-இந்தியா உறவை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.

பொதுத்துறை நிறுவனங்கள்

பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதிலும் சோவியத் ரஷ்யாவின் பங்கு இருந்தது. 1950களில் திட்டக்குழுவை உருவாக்கிய நேரு, பாரத மிகு மின் நிறுவனம், கெயில் (இந்தியா) நிறுவனம், தேசிய அனல் மின் நிறுவனம், இந்திய உருக்கு ஆணையம், இந்தியா நிலக்கரி நிறுவனம், இந்தியன் ஆயில் கார்பரேசன் மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் என பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார்.

இதில் நாட்டின் பல பகுதிகளில் சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் இந்நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

எரிசக்தி மற்றும் விண்வெளி

அதேபோல எரிசக்தி துறையிலும் சோவியத் ரஷ்யாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம் கூட சோவியத் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம்தான்.

ராக்கெட் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு ரஷ்யா பக்கபலமாக இருந்துள்ளது. சோவியத் ரஷ்யா விண்வெளித்துறையில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தபோது, மூன்றாம் உலக நாடுகளில் விண்வெளி ஆய்வை ஊக்குவிக்க பல வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து இளம் வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டது.

அதன் அடிப்படையில் இந்தியாவின் ராகேஷ் ஷர்மா விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியாவிலிருந்து முதன் முதலில் விண்வெளிக்கு சென்றவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையிலேயே ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.