குடியரசு துணை தலைவர் பதவிக்கு எதிர்கட்சி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது அரசில் பயணம் குறித்த செய்தியை இந்த பதிவில் பார்க்கலாம்.
கிராம பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை, பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் வழங்க வேண்டும் என்ற கொள்கையை முதலில் வடிவமைத்த, முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை பற்றிய செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் 1942ம் ஆண்டு ஏப்ரல் 14ல் பிறந்தவர் மார்கரெட் ஆல்வா. தன்னுடன் சட்டம் படித்த நிரஞ்சன் ஆல்வாவை மணந்தார். இவருடைய மாமனார் ஜோச்சிம் ஆல்வாவும் – மாமியார் வயலட் ஆல்வாவும் இரு தசாப்தங்கள் தம்பதியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவர்கள். வயலட் ஆல்வா மாநிலங்களவை துணைத்தலைவர் பதவியில் இருந்தபோது இயற்கை எய்தினார்.
சிறு வயது முதலே குழந்தைகள், மகளிர் நலன் சார்ந்த சமூகப்பணிகளில் ஆர்வமுடன் பணியாற்றிய மார்க்ரெட் ஆல்வா. மாமியார் வயலட் ஆல்வாவின் மறைவுக்கு பின், இந்திரா காந்தியின் வழிகாட்டுதல் படி காங்கிரசில் இணைந்தார். கர்நாடக மாநில காங்கிரசிலும், தேசிய அளவிலும் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
1974 ம் ஆண்டு முதல் 1998 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், 1999ம் ஆண்டு உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகா மக்களவை உறுப்பினராகவும் நாடாளுமன்றம் சென்றார். 30 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர், சிறந்த நாடாளுமன்றவாதி, சமூகப்பணிகளில் மிகுந்த ஆர்வம் என பன்முகத் தன்மை கொண்டவர் மார்க்ரெட் ஆல்வா. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் நரசிம்ம ராவ் ஆகியோரது ஆட்சியில் மத்திய அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது குழந்தைகள், பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்க எடுத்த முயற்சிகளுக்கு இவர் உறுதுணையாக இருந்துள்ளார். கிராம பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை, பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் வழங்க வேண்டும் என்ற கொள்கையை முதலில் வடிவமைத்த பெருமைக்குரியவர் மார்கரெட் ஆல்வாதான்.
2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை, உத்தரகாண்ட், ராஜஸ்தான், குஜராத், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றியவர்.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞராக இருந்த இவரது கணவர் நிரஞ்சன் ஆல்வா, 2018 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். சமீபத்திய ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த மார்கரெட் ஆல்வா, தற்போது குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி வாகை சூடுவரா என பார்க்கலாம்









