முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

நாட்டின் 16-வது அட்டார்னி ஜெனரல் யார்?


மணிகண்டன்

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக (Attorney General of India) செயல்பட  மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மறுத்துவிட்டார் என்பது சமீபத்திய செய்தி. ஆனால், சட்ட வல்லுநர்கள் இடையே இது பரபரப்பாக பேசப்பட்டு ஆலோசிக்கப்படும் விவாதப் பொருளாகியுள்ளது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி என்பது அரசியல் சாசன பதவியாகும். இந்தப் பதவியை ரோத்தகி 2014ம் ஆண்டு ஜூன் முதல் 2017ம் ஆண்டு ஜூன் வரை  வகித்துள்ளார். பல சர்ச்சைக்குரிய வழக்குகளை தனது பதவிக் காலத்தில் கையாண்டிருக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2017 ஆம் ஆண்டு முகுல் ரோத்தகி அட்டார்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நாட்டின் 15வது அட்டர்னி ஜெனரலாக 2017-ம் ஆண்டு ஜூலை 1-ல் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பொறுப்பேற்றார். அவரது 3 ஆண்டுகால பதவிக் காலம் 2020-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. எனினும், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

கே.கே.வேணுகோபால்

2022-ம் ஆண்டு வரைதான் பணியில் இருப்பேன் என அப்போது கே.கே.வேணுகோபால் நிபந்தனை விதித்து பணி நீட்டிப்பை ஒப்புக் கொண்டார். தற்போது கே.கே.வேணுகோபாலின் பணி காலம் வரும் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது. 91 வயதான அவர் பணியில் நீடிப்பது கடினம் என்பதால் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மீண்டும் முகுல் ரோத்தகியை நியமிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதன்படி அந்த வாய்ப்பை மத்திய அரசும் அவருக்கு வழங்கியது. ஆனால், தலைமை வழக்கறிஞராக செயல்பட மூத்த வழக்கறிஞரான முகுல் ரோத்தகி மறுப்பு தெரிவித்துள்ளார்.

யார் இந்த முகுல் ரோத்தகி?

டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அவத் பெஹாரி ரோத்தகியின் மகன்தான் முகுல் ரோத்தகி. இவர் சட்டம் படித்து வழக்கறிஞரானார். 1999ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்த காலத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட 2002 குஜராத் கலவர வழக்கில், அந்த மாநில அரசின் சார்பில் ஆஜராகி வாதாடினார்.

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதை அடுத்து, 2014ம் ஆண்டு முகுல் ரோத்தகி அட்டார்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டார். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க தேசிய நீதித்துறை ஆணையத்தை நிறுவுவதற்கான தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் மற்றும் 99வது அரசமைப்புத் திருத்தம் தோல்வியுற்ற போதிலும், அதற்கு ஆதரவாக முகுல் ரோத்தகி வாதாடினார்.

ஆஜரான முக்கிய வழக்குகள்

முகுல் ரோத்தகி ஆஜரான மிக முக்கியமான வழக்குகளில், ஆதார் தனிநபரின் தனியுரிமைக்கு அச்சுறுத்தலானது என்பது தெடார்புடைய வழக்கு ஆகும். பயோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்துவதற்கான ஆதார் வழக்கில், அட்டார்னி ஜெனரலாக இருந்த ரோத்தகி, ஒரு தனிநபருக்கு தனது உடலின் மீது முழுமையான உரிமை இல்லை என்ற தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நீதிபதி பி.எச்.லோயா உயிரிழப்பு தொடர்பான வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக ரோத்தகி நியமிக்கப்பட்டார். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்த வழக்கு, ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி கைது வழக்கு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளில் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடியுள்ளார்.

முகுல் ரோத்தகி

குஜராத் கலவரம் தொடர்புடைய வழக்கில் பல மேல் முறையீடுகளில் ஆஜராகி சிறப்பாக வாதாடினார். இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு கலவரத்துக்கும் அப்போது குஜராத் முதல்வராக இருந்த தற்போதைய பிரதமர் மோடிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்தது.

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் வழக்கிலும் சிறப்பாக வாதாடி அவரை நீதிமன்றத்தால் விடுவிக்கச் செய்தார் முகுல் ரோத்தகி.

2014இல் நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா இதயச் செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அப்போது சொராபுதீன் ஷேக் கொலை வழக்கை அவர் விசாரித்து வந்தார். அந்த வழக்கில் தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டப்பட்டிருந்தார். இந்த வழக்கில் அமித் ஷாவுக்கு ஆதரவாக முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார்.

பல கோடி ரூபாய் கடனாகப் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்புடைய வழக்கில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்புக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடினார்.

தற்போது சொலிசிட்டர் ஜெனரலாக இருந்துவரும் துஷார் மேத்தாவை அட்டார்னி ஜெனரலாக மத்திய அரசு நியமிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துஷார் மேத்தா

 

 

அட்டார்னி ஜெனரல் பதவிக் காலம் 3 ஆண்டுகள். அரசமைப்புச் சட்ட விதி 76 இன் படி அட்டார்னி ஜெனரலை குடியரசுத் தலைவர் நியமிப்பார்.

 

இந்திய அரசுக்கு சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குபவராகவும், அதன் சார்பில் வாதாடுவதும் அட்டார்னி ஜெனரலின் முக்கிய கடமைகள் ஆகும். இவருக்கு உதவி புரிய சொலிசிட்டர் ஜெனரலும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும் உள்ளனர்.

அட்டார்னி ஜெனரல் பதவியை மறுத்தது ஏன்?

இப்படி முன்னணி வழக்கறிஞராக கருதப்படும் முகுல் ரோத்தகி, அட்டார்னி ஜெனரல் ஆக பொறுப்பேற்க ஒப்புக் கொண்டிருந்தால் 16ஆவது அட்டார்னி ஜெனரலாக ஆகியிருப்பார்.

“அட்டார்னி ஜெனரல் பொறுப்பு வேண்டாம் என்பதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை” என்று முகுல் ரோத்தகி கூறியிருக்கிறார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரூ. 2 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சம் பறிமுதல்!

தமிழகத்தைச் சேர்ந்த 27 பேர் மட்டுமே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி

Arivazhagan Chinnasamy

ஐபிஎல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூரு அணி

Halley Karthik