நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், புதுச்சேரியில் நீட் நுழைவுத்தேர்வை 6 ஆயிரத்து 200 மாணவர்கள் எழுதுகின்றனர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இத்தேர்வு 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 329 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதில், 10 லட்சத்து 64 ஆயிரம் பேர் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 18 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஒரு லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் தேர்வு மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்களை சோதனை செய்வதற்கான இடங்கள், சமூக இடைவெளி விட்டு நிற்க குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன.
இதேபோல், புதுச்சேரியில் நீட் நுழைவு தேர்வை 6,200 மாணவர்கள் எழுதுகின்றனர். ஜிப்மர் கேந்திர வித்யாலயா பள்ளி, காலாப்பட்டு தி ஸ்டடி பள்ளி, மனக்குள விநாயகர் கல்லூரி உட்பட 8 மையங்களில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு மையங்களில் காலை 11:40 மணி முதல் மாணவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட், மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே தேர்வு எழுது அனுமதி அளிக்கப்படுகிறது.
– இரா.நம்பிராஜன்








