தமிழர்களிடையே வைகைப்புயல் வடிவேலு ஏற்படுத்திய தாக்கம் என்ன?

யார் இந்த நகைச்சுவை மன்னன் வைகைப்புயல் வடிவேலு ?  வடிவேலு… தமிழ் உள்ளங்களில் என்றும் தனக்கான இடத்தை தன் நகைச்சுவையால் பெற்றுள்ள ஓர் பெருங்கலைஞ்சன். ஒரே நிமிடத்தில் சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும், சில…

யார் இந்த நகைச்சுவை மன்னன் வைகைப்புயல் வடிவேலு ? 

வடிவேலு… தமிழ் உள்ளங்களில் என்றும் தனக்கான இடத்தை தன் நகைச்சுவையால் பெற்றுள்ள ஓர் பெருங்கலைஞ்சன். ஒரே நிமிடத்தில் சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும், சில நேரங்களில் கண்ணீர் துளிகளை சிந்த வைக்கவும் வல்ல சிறப்பான நடிகன். எந்த நேரத்தில் யார் எது போன்ற மனநிலையில் இருந்தாலும் வடிவேலு காமெடி பார்த்துவிட்டால் சிரித்துவிடுவார்கள். மிகுந்த மன உளைச்சல், மன அழுத்தம் கொண்ட இக்கால இளைஞர்கள் தொடர்ந்து பெரியவர்கள் என அனைத்து வயதினருக்கும் மருந்து போட்ட நடிகன். தமிழ் சினிமாவில் நடிப்பால் உயர்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகன் என்றால் அதே போன்று தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்ட காமெடியன் நடிகர் வடிவேலு.

திரையரங்குகளுக்கு செல்லும் அனைவரும் 3 மணி நேர சீரியசான படத்தை மட்டுமே எதிர்பார்த்து செல்வதில்லை. அவற்றையும் தாண்டி, காதல் கொஞ்சம், காமெடி கொஞ்சம், கதை கொஞ்சம் இவற்றைதான் அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். இவற்றில் காமெடிக்கு தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு இன்றளவும் அனைவராலும் ரசிக்கப்படும் உண்ணத கலைஞ்சன் வடிவேலுவை சுற்றியே நகர்கிறது இன்றைய கதைகளின்கதை.

காமெடி என்றால் கவுண்டமணி செந்தில்தான். இங்கே வேறு யாருக்கும் இடமில்லை. துணை நடிகர்கள் பலர் இருந்தும் அங்கு பிரதான நகைச்சுவை நடிகர்களாக வலம் வந்துகொண்டிருந்த கவுண்டமணி செந்திலின் காலகட்டம் அது. அந்த இடத்தில்தான் அவர்களுடனே நடித்து அவர்களை மிஞ்சிவிட்ட கலைஞ்சன் ஒருவன் சினிமாவிற்குள் நுழைந்தான். ஆம், அவன் பெயர்தான் வடிவேலு. பிறரை இகழ்வது, இழிபடுத்தி பேசுவது, அடிப்பது, உதைப்பது இவைதான் அப்போது காமெடியில் ஜொளித்துக்கொண்டிருந்த கவுண்டமணயின் காமெடி பாணி.

செந்தில் வெகுளித்தனம் என்ற பெயரில் கவுண்டமணியிடம் வம்பிழுப்பது, அதற்கு பதில் சொல்ல முடியாமல் செந்திலை போட்டு கவுண்டமணி அடிப்பது, உதைப்பது போன்ற காமெடி காட்சிகளே அன்றைய தமிழ் சினிமாவின் நகைச்சுவை இடத்தை ஆக்ரமித்திருந்தது. பெரும்பாலான காட்சிகளில் கவுண்டமணியும் செந்திலும் உறவினர்களாகவும், ஒரே வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களாகவும், அல்லது ஒரே ஊரில் சுற்றித்திருந்துகொண்டு, அண்ணே, தம்பி என்று கூறிக்கொண்டு நடுத்தர வயதில் திரியும் நபர்களாகவே கவுண்டமணி செந்தில் இடம்பெற்றிருப்பார்கள். இவர்களுக்கிடையிலும், இவர்களால் ஏற்படும் வம்பு சண்டையுமே அன்றைய சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள்.

ஆனால் இந்த கவுண்டமணி செந்திலுடன் இணைந்து நடித்து பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் வடிவேலுவின் பாணி கொஞ்சம் புதிதானது. தன்னைத்தானே இகழ்ந்துகொள்வது, கேலி செய்வது, விமர்சனம் செய்வது, வீராப்பாக பேசி வீண் வம்பிழுத்து இறுதியில் அடி உதை வாங்குவது. அடி வாங்க முடியாமல் ஓடிவிடுவது. இவைகள்தான் வடிவேலுவின் நகைச்சுவை பாணி. கவுண்டமணி செந்திலின் பல காட்சிகளில் கதாநாயகர்களையே கலாய்க்கும் கதாப்பாத்திரமாக கவுண்டமணி இருந்தார். ஆனால் இந்த பாணியையும் வடிவேலு தொடவே இல்லை. நாயகர்களுடன் இணைந்து நடித்தாலும் எந்த நேரத்தில் தன்னை மட்டுமே குறையாக வைத்து காமெடி செய்திருப்பார் வடிவேலு. அதே போன்று கவுண்டமணியின் வெகு சில காட்சிகள் இப்படி இருந்திருக்க வேண்டாமே என்று ரசிகர்களை நினைக்க செய்துவிடும். ஆனால் வடிவேலுவின் எந்த காமெடியும் அப்படி அமைந்திருக்காது.

சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீதிருந்த ஆர்வம் காரணமாக மேடை நாடகங்களில் நடித்திருந்தார் வடிவேலு. இதில் குறிப்பிட வேண்டியது வடிவேலு ஏறிய மேடைகள் அனைத்திலும் தன்னை ஒரு நகைச்சுவை நடிகனாகவே காட்டிக்கொண்டார். வடிவேலுவின் சினிமா பசிக்கு முதலில் தீணி போட்டவர் டி. ராஜேந்தர். 1988ம் ஆண்டு வெளியான என் தங்கை கல்யானி திரைப்படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் வடிவேலு. கிட்டத்தட்ட 1.30 நிமிடம் நீடிக்கும் அந்த காட்சியில் தனது சைக்கிள் பெல்லை திருடிய சிறுவனை பிடித்து ஏண்டா திருடுன, திருடுனதையும் திருடிட்டு திமிரா வேற பேசுரயா என்று கேட்பார் வடிவேலு. உடனே என் தலையிலிருந்து கைய எடுக்கரயா இல்ல உன் மண்டைய கல்லால உடைக்கவா என்பான் சிறுவன். இந்த கதாப்பாத்திரமும் வசனமுமே வடிவேலுவின் சினிமா வாழ்வின் முதல் புள்ளி. உண்மையில் அந்த வசனம் வேறு ஒருவரால் டப்பிங் செய்யப்பட்டிருக்கும். ஆனால் 80களின் இறுதியில் வடிவேலுவுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு அது.

தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வே கிடையாது என்ற கருத்து சிலரால் அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. அது, தங்களை அதி தீவிரக் கருத்தியல்வாதிகளாகவும், மிகத் தீவிரச் செயல்பாட்டாளர்களாகவும் கருதிக்கொள்பவர்களுடைய அரிய கண்டுபிடிப்பாகும். இந்த நகைச்சுவை உணர்வை தர, நிர்ணயம்செய்ய உதவும் தரவு எது என்று கேட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி, தமிழ் சினிமா எனும் கருவூலம்தான் என்று சொல்லிவிடலாம்.

தமிழ் சினிமாவுக்கும், தமிழர்களின் வாழ்விலுக்கும் மிகவும் ஆழமான உறவு உண்டு. ஆம், இரண்டு தமிழர்கள் பேசிக்கொள்கிறார்கள், அவர்களுடைய பேச்சின் பத்தாவது நிமிடத்துக்குள்ளாக, தமிழ் சினிமா பற்றிய தகவல் ஒன்று இடம்பெறவில்லை என்றால், அவர்களின் ‘தமிழ்த்தனம்’ சந்தேகத்துள்ளாகிவிடும். இதில் ஆண் – பெண் – மூன்றாம் பாலினம் என்ற பாகுபாடுகள் இல்லை.

ஆனால், இதில் பீட்டர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் இடம் இல்லை. அவர்களின் தரவு அவர்களே பார்த்திராத, கேள்வி வழியாக மட்டும் அறிந்த உலக சினிமாவாக இருக்கும். வளர்பருவத்தில் அக்காமார், அத்தாச்சிமார் உரையாடல்களில், ‘காலம்’ தொடர்ந்து சினிமா வழியாகவே அடையாளப்படுத்தப்படும். உதாரணத்துக்கு, ` ‘காதலிக்க நேரமில்லை’ படம் ரிலீஸ் அன்னைக்குதான் மலர் பிறந்தா’என்பதும், ‘பணமா பாசமா’ பாத்துட்டு வந்தபோதுதான் தாத்தா செத்துப்போன செய்தி வந்தது…’ இப்படி வாழ்வின் குறிப்பிட்ட மிக முக்கிய நாட்கள் எம்.ஜி.ஆர் அல்லது சிவாஜி பட வெளியீடுகள் மற்றும் அவர்கள் நடித்த திரைப்படக் காட்சிகள், வசனங்கள் தொடர்பானதாகவே இருக்கும்.

இது பொதுவிதி. எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு இணையாக ‘பேச்சின்’ பகுதியானவர்கள் நகைச்சுவை நடிகர்கள். அவர்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், காளி என்.ரத்னம் தொடர்ந்து டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, சுருளிராஜன், நாகேஷ், மனோரமா என முடிவில்லாமல் முடிவில்லாமல் அந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். இந்தப் பெரும் பாரம்பர்யத்தின் உச்சநட்சத்திரங்களாகக் கருதப்படவேண்டியவர்கள்தான் கவுண்டமணியும் வடிவேலுவும். இந்திய தொலைக்காட்சிகளில் தமிழில் இரண்டு சேனல்கள் பிரத்யேகமாக நகைச்சுவைக் காட்சிகளுக்கு மட்டும் இருப்பதே நகைச்சுவை, தமிழர் வாழ்வின் பிரதானமானதற்கு சாட்சியாகும். படுக்கையறைக்குள் புகுந்துவிட்ட இந்த சேனல்களோடுதான் மக்கள் தூங்குவதற்குப் போகிறார்கள். அது ஒரு வகையில், அந்த நாளின் அழுத்தங்களில் இருந்து அவர்களை விடுவிப்பதாகவும் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

இன்றளவிலும் மீம்ஸ் உலகின் நாயகனாக திகழும் வடிவேலுவுக்கு முதல் முத்திரை படமாக அமைந்தது, நடிகர் ராஜ்கிரனின் என் ராசாவின் மனசிலே திரைப்படம்தான். அப்போதையை நகைச்சுவை ஜாம்பவான்கள் கவுண்டமணி செந்தில் இருக்கும் காட்சிகளில்தான் வடிவேலுவும் தோன்றியிருப்பார். குறிப்பாக என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் கவுண்டமணியிடம் சென்று அண்ணே என் பொண்டாட்டி செத்து போய்ட்டாண்ணே, அடடே எப்படிடா என்று கவுண்டமணி கேட்பார். உடனே வடிவேலுவும், அந்த கொடுமைய எப்படிண்ணே சொல்லுவேன் என்பார். அப்போ சொல்லாத போ நாயே என கவுண்டமணி சொன்னவுடன், உங்க கிட்ட சொல்லாம இந்த நாய் வேர யார்கிட்டணே சொல்லப்போது… என்பார். இப்படி கவுண்டமணி வடிவேலு இருவரும் மாறி மாறி சொல்லிக்கொள்வதே நகைச்சுவை காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும்.

50 சொச்சம் வருட தமிழ் சினிமா பார்வையாளனின் மனதில், ஓங்கி நிற்கும் வடிவேலு, முந்திக்கொண்டு வருவதற்கான காரணிகள் பல உள்ளது. ஒல்லியான கிராமத்து இளைஞனாக வடிவேலு காமெடிகளில் தோன்றினாலும் அவரது டைமிங் பிரதான இடத்தை பிடித்து காமெடியை மெருகேத்தும். அதற்கு அடுத்ததாக அவரது நகைச்சுவையை ஹிட்டடிக்கச் செய்த கூறு, அவரது உடல்மொழி.
காமெடி உலகின் நாயகனாக அறியப்படும் வடிவேலு கதாப்பாத்திரத்தின் தன்மையை அறிந்து, அதற்கு உரிய உடல்மொழி கட்டமைத்துவிடுவார். தன் உடல் மொழி, வசனங்கள் என்ற வாய்மொழி என்று இரண்டு கூறுகள் இருந்தாலும் இயல்புக்கு ஏற்றவாறு பிற பாத்திரங்களை ஓரங்கட்டாமல் நடிப்பது வடிவேலுவின் பாணி.

இந்த அடிப்படைகளில் ஒரு நகைச்சுவை நடிகனுக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி டைமிங் சென்ஸ்தான். இன்னும் சொல்வதானால், அதுதான் ஒருவரை நகைச்சுவை நடிகராக்குவதன் அடிப்படையே. ரஜினிகாந்த் உள்ளிட்ட சூப்பர்ஸ்டார்களே இந்த குணநலன் வழியாகத் தங்களை நிலைநிறுத்திக்கொண்டவர்கள்தான். இதர உச்சநட்சத்திரங்களான கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா போன்றவர்கள், இந்த நகைச்சுவை ‘டைமிங்’கில் தட்டுத்தடுமாறி சமாளிப்பவர்கள்தான்.

வடிவேலு பற்றி பேசும் போதும் அவரின் இரண்டாவது படமான‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் அவர் தோன்றும் முதல் காட்சியில் இருந்து தொடங்குவது சரியாக இருக்கும். ‘உன் வாயால் உனக்கு ஆபத்து. நீ சும்மா இருந்தாலும் உன் வாய் சும்மா இருக்காது’ என ஜோசியக்காரர் சொல்ல, முன்னால் அமர்ந்து கேட்கும் ஒல்லிப்பிச்சான் வடிவேலுவின் முகபாவம் கேமராவை முதன்முதலாக எதிர்கொள்பவரைப் போன்று இல்லாமல், ஒரு நீண்ட அனுபவமிக்க நடிகனின் பாவத்தை வெளிப்படுத்தும். ஜோசியர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு முகபாவனையை காட்டுவார் வடிவேலு. உண்மையில் இந்த காட்சியை பார்க்கும் நடிகர்களுக்கு புதிய நடிகராகவே தெரியாது. மேலும் அந்த காட்சியில் ஜோசியம் கேட்பவனின் ஆர்வமும் எதிர்பார்ப்பும் அவரது கண்களில் மின்னும்.

ஜோசியக்காரன் குரல் லயத்துக்கு ஒத்திசைவான எதிர்வினை முகத்தில் வெளிப்படும். அதற்கு அடுத்து, கவுண்டமணியிடம் சிக்கி உதைபடும் காட்சி. அந்தக் காட்சியிலும் அவ்வளவு இயல்பாக இருக்கும் அவரது இருப்பு. அந்தக் காட்சியில் வடிவேலுவின் உடல்மொழி, காட்சியின் தன்மையை யதார்த்தத்துக்கு நெருக்கமாகத் தள்ளிவிடும்.

இதற்கு பிறகு இசக்கி என்ற பாத்திரப் பெயருடன் அவர் நடித்த ‘தேவர் மகன்’ திரைப்படம்தான் அவரை அடுத்த கட்டத்துக்கு உந்தித்தள்ளிய ஒரு படம். குறிப்பாக, கலவரத்தில் ஒரு கையை இழந்து மருத்துவமனையில் இருப்பவரைப் பார்க்கவரும் கமலிடம், ‘அதெல்லாம் ஒண்ணுமில்லீங்கய்யா’ என்று சிரித்துவிட்டு, ‘என்ன… கழுவுன கையிலேயே திங்கணும், திங்கற கையிலேயே கழுவணும்’ எனும் காட்சி ஒரு நகைச்சுவை நடிகனை அசைக்க முடியாத நடிக ஆளுமையாக உருவாக்கிய தருணங்களில் முக்கியமானது. அறிமுக நடிகரான வடிவேலு, தன்னை நிறுவிக்கொண்ட வகைக்கு இந்தக் காட்சிகள் சாட்சியம்.

வடிவேலுவை பற்றி பேச ஆரம்பித்து அவரது அனைத்து கதாப்பாத்திரங்களையும் விளக்க முயல்வது உண்மையில் மிகவும் கடினமானதே. ஆனால், சில வகைமைகள் அறிந்துகொள்ள வேண்டியவையாகவும் தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவையாகவும் இருக்கும். வடிவேலுவின்பெரும்பான்மையான ஆரம்பப் பாத்திரங்கள் அவரை உடல் வலுவும் பொருளாதாரம் மற்றும் சாதிய வலுவும் அற்ற, வாய்த்துடுக்காகப் பேசி வம்பில் மாட்டிக்கொள்ளும் கிராமத்து விளிம்புநிலை மனிதனாகவே சித்தரித்தன.

இந்த வகைமையின் பிரதான மாதிரி ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் `சொன்னான்’ பாத்திரம். சலவைத் தொழிலாளியான அவர் செய்யும் ‘சேட்டைகள்’, ஒரேவேளையில் சாதியப் படிநிலைகளைக் கலைப்பதாகவும் உடனடியாக அதைச் சமன்செய்வதாகவும் இயங்கும். உயர்சாதி வில்லனின் நிலத்தில் அவனை துச்சமாகத் தன் நண்பனிடம் பேசுவதும், அந்தப் பேச்சு வெளிப்பட்டு அடிவாங்குவதில் முடிவதும் ஒருசேர நிகழும். இந்தத் திரைப்படத்தின் ஒரு காட்சியில் குடித்துவிட்டு வந்து தெருவில் பாயை விரித்துப் படுத்துத் தூங்க முயற்சிக்கும் வடிவேலு அந்த பாயுடன் நிகழ்த்தும் ‘நாடகம்’ தேர்ந்த நடிகனின் லாகவமாகும்.

கையில் எடுத்து பாயை விரிக்க முயற்சி செய்யும் போது அது நீளாமல் சுருண்டே இருக்கும். இதனால் அதன் மேல் ஆத்திரப்பட்டு ஒரு புரத்தில் இருந்து காலை வைத்து மற்றொரு புரம் வரை நீளச் செய்து பார்க்கும் வடிவேலுவுக்கு அது ஒரு சவாலான காரியமாக அமையும். இறுதியில் பாயை பிடித்தபடி நேராக விழுவது போல படுக்க முயற்சி செய்கையில் கீழே விழுந்து மூக்கு உடைந்து ரத்தம் தெரிக்கும். இந்த பாத்திரைத்தை வடிவேலு கையாண்ட விதம்தான் அவரை தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக வலம் வரச் செய்துள்ளது.

ஓர் ஓரங்க நாடகத்துக்கான நீளம்கொண்ட காட்சியில் பெரும்பான்மையாக ஒரே ‘டேக்’கில் எடுக்கப்பட்டிருக்கும் காட்சி அது. அதில் அவர் காட்டும் பாவம், உடல்மொழி ஆகியவை தனித்துவமானவை. வடிவேலுவின் முத்திரைப் பாத்திரம் ‘உதார்’விடும், வெட்டி ஜம்பம் பேசிவிட்டு கிராமத்து முரடர்களிடம் சிக்கித் தவிப்பதுதான். இந்த வகைப் பாத்திரங்களின் நடிப்புத் தேவை மிக நுட்பமானது. ஒரே வேளையில் ‘வாய் வீச்சும்’, அதைத் தொடரும் எதிர்வினையை துணிச்சலாக எதிர்கொள்வதுபோலவும் ஆரம்பித்து, இறுதியில் அஞ்சி ஓடுவதாக அல்லது அடி வாங்குவதாக காட்சிகள் நடிகனின் வெவ்வேறு முகபாவங்களை வெளிப்படுத்தும். இதுபோன்ற காட்சிகளில் அநாயசமாக நடித்திருப்பார் வடிவேலு.

‘டேய் நாங்கள்லாம் சிங்கம்டா’ எனும் போதுள்ள முகபாவத்தில் இருந்து எதிராளி முறைக்கத் தொடங்கியதும், ‘நாங்கல்லாம் யாரு வம்புக்கும் போறது இல்ல’ என்று ஜகாவாங்கும் முகபாவத்துக்கு மாறுவது சவாலானது. ஆணவச் செருக்கில் இருந்து அச்சத்துக்கு இடம் பெயரும் சவால். இந்த விதமான காட்சிகளை சாதாரணமாக கையாள்வது வடிவேலுவுக்குக் கைவந்த கலை.

ஆனால், அவருக்கான சவால் நகர்ப்புற இளைஞன் வடிவில் வந்தது. கிராமப்புற நடிகனாக, கருப்பு நாகேஷாக அழைக்கப்பட ஆரம்பித்த வடிவேலுவுக்கு, இது மட்டும் வெற்றி அல்ல. அனைத்து கதாப்பாத்திரங்களையும், அனைத்து காட்சிகளையும் தனது நடிப்பால் பூர்த்தி செய்திட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசைக்கு முட்டுக்கட்டையாக நகர்ப்புற இளைஞன் தோற்றம் வந்தாலும் அவற்றையும் தனக்கான பாணியில் உடல் மொழியில் அசத்தி இருப்பார் வடிவேலு.

நகர்ப்புற இளைஞனாக வரும் போது உடல்வாகு பொருத்தமாக இருந்தபோதும், அவரது `அன்னியமான’ உடல்மொழியை வடிவேலு கையாண்டவிதம்தான் அவரது உச்சபட்ச சாதனையாகக் கருதலாம். குறிப்பாக, கல்லூரி மாணவராக மத்தியதர வர்க்க அடையாளங்களோடு இருந்த கதாநாயகர்களோடு வரும்போது அவர் துருத்தலாக இருப்பதை, வேறுவகையில் பதிலீடு செய்யத்தொடங்கினார். அதாவது நகர்ப்புற பீட்டரிங்கை அவரது இயல்பான பாணியில் கையாளுவதற்கான பாத்திரங்களைத் தேர்வுசெய்தார். அரைகுறை ஆங்கிலம், நாகரிகமான நடை என்ற ரூபத்தில் கிண்டலான உடலசைவு போன்றவற்றை முன்வைக்கத் தொடங்கினார் வடிவேலு.

‘சிங்காரவேலன்’ படம் இந்த வகையில் அவருக்கு மிகவும் நெருக்கடியான சூழலை உருவாக்கியது. பொதுவாகவே நகைச்சுவை நடிகர்கள் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் தோன்றும் காட்சிகளில், குறிப்பாகக் கவுண்டமணி உச்சத்தில் இருந்த காலமான அந்த நாட்களில், காட்சிகளின் ஒவ்வொரு ஃபிரேமிலும், அவர் குரலாலும் அதீத உடலசைவாலும் பிறரை/ சக நடிகர்களை ஆதிக்கம் செய்தபடி இருப்பார். அவரது நெருக்கடிக் காட்சிகளின் ஊடாக அது அப்பட்டமாகத் தெரியும்.

அந்தப் படத்தில் அவரது பாத்திரம் இசைக்குழுவில் வாத்தியக்கருவி ஏதும் வாசிக்கத் தெரியாத அரைகுறை ஆங்கிலத்தில் அலட்டுவதாக இருக்கும். பாறையின் இடையே சிக்கிய மரமாக வடிவேலு ‘வாயசைக்க’க் கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்களில் ஒரு விநோத ஒலியை எழுப்பிக் கவனத்தை ஈர்ப்பார். அதற்குப் பின்னரான ‘காதலன்’ போன்ற திரைப்படங்களில் இந்த இம்சையில் இருந்து வெளியேறி தனி நகைச்சுவை நடிகர் ஆனார்.

வடிவேலுவின் உடல்மொழிதான் அவரின் நகைச்சுவைக்கு முத்திரைப் பதிவு. அதிலும், அவரது உடல், படத்துக்குப் படம் மாறிக்கொண்டே சென்றது. ஒரு படத்தில் அவர் எடுத்திருந்த அவதாரம், மற்றொரு படத்தில் தென்படாது. அப்படித்தான் பார்த்துக்கொண்டார். வடிவேலுவின் இந்த பாணி துணை நடிகர்கள் வரை நீண்டது. ஒரு படத்தில் அவருடன் நடித்த துணை நடிகர்கள் தொடர்ந்து அவருடன் அடுத்த படத்தில் தோன்ற மாட்டார்கள்.

குறிப்பிடத்தக்க இடைவெளியுடன் படங்களில் துணை நடிகர்களுடன் நடித்து எப்போதும் தனக்கான இடத்தை உயர்த்திக்கொண்டே சென்றார். தொடக்ககால துள்ளல் நடை தொடர்ந்து சாத்தியமாகவில்லை என்றானபோது அசைவில் ஒரு நிதானகதி வந்தடைந்தது. அதையே முதலீடாக்கினார் வடிவேலு. அவரது உடல்மொழி குறித்த ஆய்வுக்கு ‘வின்னர்’ என்ற ஒரு படமே போதும். ‘வின்னர்’ படம் வடிவேலுவைச் சுற்றி மட்டுமே இயங்கியிருந்தது.

அந்த படத்தில் பிரசாந்த் கதாநாயகன் என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உண்மையில் வடிவேலுவே நாயகான தெரிந்தார். அதற்கு ஒவ்வொரு காட்சியில் வடிவேலு செய்த சேட்டைகளும், அவர் உச்சரித்த வசனங்களும், வெளிப்படுத்தியிருந்த உடல் மொழியுமே காரணம். வடிவேலு தயவில் அவருடன் இணைந்து நடித்த காட்சிகள் வழியாக மட்டும் நினைவில் நிற்கும் நாயகர்கள் பட்டியல் நீளமானது.

‘வின்னர்’ படத்தில், குறிப்பாக தென்னந்தோப்பு ஒன்றில் அடிவாங்கும் காட்சிகள் திரையரங்களில் வந்த போது ரசிகர்களின் ஆராவாரம் விண்ணை பிளந்தன. அந்த காட்சியில் அடித்து முன்னே தள்ளப்படும்போதும் முகத்தில் வெட்டி வீராப்பு மிளிர்ந்தபடி இருக்கும். தொடர்ந்து அடிக்கப்படும்போதும் அந்த ‘மப்பை’ கைவிடாமல் முன்பின்னாகச் சாய்ந்தபடி இருப்பார். இறுதியான வலுவான அடிக்கு முன்னர் வரை எச்சரிக்கும் தொனியில் ‘வேண்டாம், வேண்டாம்’ என்றபடி இருந்துவிட்டு கடைசியில் ‘அழுதுருவேன்’ எனும்போது எதிராளியையும் சிரிக்கவைத்துவிடுவார். படத்தின் துவக்கத்தில் வடிவேலு முதலில் தோன்றும் காட்சியின்போது, பச்சை சட்டை, பென்சிலால் வரைந்த மீசை, சிவந்த கண்கள் என கதாநாயகனுக்கு கொடுக்கும் அதே பிம்பம் வடிவேலுவுக்கும் வைக்கப்பட்டிருக்கும். உண்மையில கைப்புள்ள, தமிழ் சினிமாவின் சாகாவரம் பெற்ற பாத்திரம். குணமாகிக்கொண்டிருந்த ஒடிந்த காலொன்றுடன் நடிக்கவேண்டியதானபோது, அதையே அந்தப் பாத்திரத்தின் தனித்துவமான குணமாக்கி, அதில் திளைத்தவர் அவர்.

அவரது நகைச்சுவைக் காட்சிகளுக்காக மட்டுமே நினைவில் நிற்கும் இன்னொரு படம் கிரி, பேக்கரி முதலாளியாக வரும் வடிவேலுவும் நாயகன் அர்ஜுனும் உரையாடும் காட்சி, தமிழ்த் திரைப்பட வரலாற்றின் முத்திரைக் காட்சிகளில் ஒன்று. மிகத் தீவிரமான தொனியில் தனது அல்பமான கடந்த காலத்தைப் பற்றி பேசும் காட்சிகள் ரசிகர்கள் மனதில் வடிவேலுவின் இடத்தை மேலும் அதிகரித்தது .

ஆனால், அவர் அதை ஆத்மார்த்தமான உருவாக்கத்தோடு சொல்ல முனைவார். அந்த காட்சியில் அர்ஜுனிடம் பேசும் வடிவேலு, ஆனா எங்கக்கா சூப்பர் ஃபிகர் எனும்போது அவரது வாடிக்கையான உதார் உள்ளே புகுந்துவிடும். ஏறத்தாழ ஒரே தொடர்காட்சியாக எடுக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சியில், அவரது பாவங்கள் மாறியபடியே இருக்கும். நகைச்சுவை நடிகர்களில் பலர் மிகச் சிறப்பான குணச்சித்திரப் பாத்திரங்களை ஏற்று ஜொலித்தவர்கள். ஆனால், ஒரு பாத்திரம் தனக்கு அவ்வளவு சொல்லிக்கொள்ளும்படியானதாக இல்லாத பின்புலத்தை, ஒரு குணச்சித்திர நடிகனுக்கான பாவங்களுடன் பேசி, காட்சியை நகைச்சுவையின் உச்சமாக்கியதுதான் அற்புதம். இங்குதான் நிகழ்காலத்திலேயே தொன்மநிலையை அடையும் சாத்தியம் அவருக்கு வாய்த்தது.

தமிழ் சினிமா பெரும்பாலும் நாயக மையமானது. தமிழ்சினிமாவின் உட்சபட்ச நாயகர்கள் தங்கள் சக நடிகர்களோடு எப்படி இணைவு காண்கிறார்கள் என்பது மிக முக்கியமான ஒன்று. சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் நடிகர்கள் அடிப்படையில் நல்ல நகைச்சுவை நடிகர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வகையை சேர்ந்தவர். ரஜினிகாந்த் சக நகைச்சுவை நடிகர்களுடன் ஒத்திசையவும், சில வேளைகளில் அவர்களுக்கு சவாலாகவும் செய்துவிடுவார். ஆனால் கமல்ஹாசன் இதற்கு எதிரானவர்.

அதனாலேயே கமல்ஹாசனின் பெரும்பான்மையான படங்களின் நகைச்சுவைப் பகுதிக்கான பொறுப்பையும் அவரே ஏற்பார். இதன் விளைவாக அவரது படங்களில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் ஆகியோரின் பங்களிப்பு பெரும்பாலும் தவிர்க்கப்பட்டிருக்கும். ரஜினி ‘சந்திரமுகி’ படத்துக்கு முதலில் வடிவேலுவிடம் கால்ஷீட் வாங்கிவிடும்படி சொன்னதாகச் செய்தி ஒன்று இருக்கிறது. கவுண்டமணி உச்சம் பெற்ற பிறகு காட்சிப் பரப்பிலும், வசனங்களில் கொடுத்த `அழுத்தங்கள்’ வழியாகவும் நாயகர்களை கிண்டல்செய்வதை தொடர்ந்து செய்யத் தொடங்கினார். வடிவேலுவிடம் இந்தப் போக்கின் ஓர் இணுக்கைக்கூடக் காண முடியாது. இன்றும் அடையாளமற்று இருக்கும் எத்தனையோ நாயகர்களின் படக்காட்சிகள் திரையாகும்போது, அவரது இந்தத் தன்முனைப்பற்ற தன்மை வெளிப்படும். அவர் அளவில் காட்சியின் நோக்கத்தைக் குலைக்காத வகையில் மட்டுமே தன் இருப்பை நிறுவுவார்.

ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் இந்த ஒத்திசைவு துலக்கமாக இருக்கும். சக நடிகர்களுக்கு இசைவான நடிப்பு என்ற தளத்தில் அவர் ஒரு பெரும் பொக்கிஷம். உண்மையில் சந்திரமுகி திரைப்படத்தின் காட்சிகளில் நடித்த வடிவேலு ஒரு கட்டத்தில் ஜோதிகா, ரஜினிகாந்தையும் தாண்டி ரசிகர்களை தனது நடிப்பால் தன் பக்கம் ஈர்த்திருப்பார்.

அந்த படத்தில், அரண்மனைக்கு சென்ற பிறகு, கோவாலு, டேய் கோவாலு, எங்கடா இருக்க என்று கூறிவிட்டு, பின்னால் வந்த மாப்பிள்ளை ரஜினியை காணமே என்றவுடன், மாப்பு வச்சிட்டாண்டா ஆப்பூ, என்பதும். சிங்கத்தை பார்த்து புல்லி என்பதும் புலியை பார்த்து சிங்கம் என்பதும், ஒரே நேரத்தில் பல வகையான முக பாவனைகளை காட்டுவதும், வேர்த்து விறுவிறுத்து உடல் முழுவதும் நடிப்பதும் நடிப்பின் உச்சத்தை வடிவேலு எட்டியிருப்பார். சினிமாவில் நடித்து மக்களை அழ வைப்பது எளிது என்பதை உணர்ந்த வடிவேலு, சிரிக்கவைக்கும் கடினமாக வேலையையும் தனது தொடர்ச்சியான முயற்சியால் சாதித்திருந்தார்.

தமிழ் சினிமா நகைச்சுவைக் காட்சிகளுக்கான ஆழமான தளத்தைக் கட்டமைத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன் என்ற மாமனிதர். அவரைத் தொடர்ந்தவர்களும் ஓரளவில் அதனைத் தொடரவே செய்தனர். பல வேளைகளில் சமூக வழக்கங்கள் அல்லது அமைப்புகளைத் தொடர்ந்து கிண்டல்செய்வது நடக்கும். கவுண்டமணி திரைப்படங்களில் கிராமத்து ஆலமரத்தடி பஞ்சாயத்துகள் தொடர்ந்து கடுமையாகச் சாடப்படும். வடிவேலு திரைப்படங்களின் உள்ளடக்கம் பெரும்பாலும் கிராமத்து வாழ்வுச் சூழலில் முற்றிலுமாகப் பொருந்திப்போகும் யதார்த்த அடிப்படைகள் கொண்டவை.

அவர் வம்பில் சிக்கி அடிவாங்குவதும், ஜம்பம் செய்து அவமானப்படுவதும், அவர் செய்யும் சில்லறை அடாவடிகளும், சூழலில் இருந்து முற்றிலும் விலகியிருக்காது. சாமானியர்களின் வாழ்க்கை தரத்தையே அது வெளிப்படுத்தும். உண்மையில் இக்கால மனிதர்களின் இம்சை செய்யும் இச்சைகளை வடிவேலுவின் காமெடிகள் தாங்கி நிற்கும். சைக்கிள் கடைக்காரர், ‘சைக்கிளை விடும்போது பணம் கொடுத்தால்போதும்’ என்று சொன்னதைச் சாக்காக்கி சைக்கிளைவிடாமல் சுற்றும் அடாவடித்தனம், மனைவியிடம் வாங்கிய அடிக்காக பஸ் மறியல் செய்யும் விவகாரம், பஸ்ஸில் கம்பியைப் பிடிக்காமல் நிற்கும் சாகசம், பஸ்ஸில் இருந்து கீழே விழுந்துவிட்டு, உணக்குத்தானே சேதாரம் என்று பேருந்து ஓட்டுநரிடம் கோபப்படுவது, ஒட்டகப் பாலில் டீ போடச் சொல்லும் அடாவடி, விமானத்தில் டிக்கெட் எடுக்காமல் வர முடியும் என்பதை ஒரு நொடியில் நம்பச் செய்யும் யதார்த்தம்… என அனைத்தும் வாழ்வுவெளியில் காலூன்றி நிற்பவை.

தமிழ் சினிமாவின் உரையாடல்கள், பகுதியாக அல்லது மொத்தமாகவும் பேச்சு வழக்காக மாறும் தன்மை தொடர்ந்தபடி இருக்கும் ஒன்றுதான். என்.எஸ்.கிருஷ்ணன் வார்த்தைகள், பேச்சுவழக்கின் பகுதியானது உண்டு. மரியாதையாகப் பேசும்போது ‘திரு’ போட்டுப் பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் வேலையாள் காளி என்.ரத்னம், அனைத்து உயிரற்ற பொருட்களுக்கும் மரியாதை விகுதி போட்டுப் பேசுவார் திரு.நாற்காலி, திரு.அலமாரி… என்று இனிமேல் ‘திரு’ போடக் கூடாது என்று அறிவுரை மாற்றப்படும். மறுநாள் ‘திருடன் திருடிக்கொண்டு போய்விட்டான் என்பதை ‘டன் வந்து டிக்கிக்கிட்டுப் போயிட்டான்’ என்பார். இந்த வேடிக்கைப் பேச்சு வழக்காறின் பகுதியானது. ‘டணால்’ தங்கவேலு என்ற அடையே கே.ஏ.தங்கவேலுவுக்கு அவரது ‘டணால்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தின் வழி நடந்தது.

‘என்னத்த’ கன்னையா என்ற பெயராலேயே ஒரு நடிகர் அறியப்பட்டார். அவர் ஒரு திரைப்படத்தில் ‘என்னத்தப் பார்த்து, என்னத்தப் பேசி’ என்று சலிப்பை வெளிப்படுத்தும் விதமாகப் பேசுவார். அது வழக்காறு ஆகி மாணவர்களிடையே ‘என்னத்தப் படிச்சு, என்னத்த பாஸ் பண்ணி என்ற பொதுமொழியானது. பல வேளைகளில் நாயகர்களின் பன்ச் டயலாக் வடிவில் இது நடந்ததும் உண்டு. அதாவது, அது மீண்டும் உச்சரிக்கப்படும்போது அதன் ‘பொருள்’ அதேவிதத்தில் தொடரும். ‘நான் ஒரு தடவை சொன்னா நூறுதடவை சொன்னது மாதிரி’ என்பது அதன் மூலத்தின் பொருளை இழப்பது இல்லை. பொதுவழக்காக எல்லா சூழல்களிலும் அவற்றின் ‘தொனியை’ உள்வாங்கி இயக்கம்கொள்வது வெகு சில வார்த்தைகளே. அந்த வகைக்கான மிகச் சிறந்த மாதிரி, கவுண்டமணியின் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’. ஆனால், இந்தத் தளத்தில் வடிவேலு தமிழ் மொழியின் பேச்சு அகராதிக்கு ஒரு பெரும் கொடையாளர் எனும் அளவுக்கு அவரது சொற்பிரயோகங்களும், அவற்றை அவர் உச்சரித்தவிதமும் நடந்தேறின.

பெரும்பாலும் மதுரை ஸ்லாங்கில் பேசியவர் வடிவேலு. மதுரை பிரதேசத்தின் உடல்மொழியையும், ஒலி எழுப்புதல் முறைகளையும் இயல்பாகவும் லாகவமாகவும் கையாண்டு, அந்தச் சொற்பிரயோகங்களுக்கு தமிழகம் தழுவிய அங்கீகாரத்தையும் பேச்சுவழக்கின் பகுதியாக மாறும் வாய்ப்பையும் உருவாக்கினார். மிக எளிய ‘ஆஹா!’ ‘ஏய் வந்துட்டாய்ங்கடா’, ‘நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு’, ‘நாங்கள்லாம்…’ ‘அது போன மாசம்’, ‘அய்யோ… அய்யோ…’, ‘ஒனக்கு கப்பு இல்ல, வெங்கல சொம்புகூட கிடையாது’, ‘அப்படியெல்லாம் சொல்லப்படாது’, ‘இங்க பாரு, அண்ணனைப் பாரு… மனசு தைரியத்தை மட்டும் விடப்படாது’, ‘டேய் அவனா நீயி?’, ‘என்னமோப்பா’, ‘பேசுறயா… லேடன்கிட்ட… பின்லேடன் கிட்ட’, ‘நம்மல்லாம் யாரு வம்புக்கும் போறதில்ல,’ ‘பறிகொடுத்தவனுக்குத்தானடா வலி தெரியும்’, ‘என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே’… என நீண்டபடி இருக்கும் பட்டியல் அது.

உள்ளபடியே வடிவேலு நகைச்சுவைக் காட்சிகள் வழியாக அறிமுகமாகி, இன்று புழக்கத்தில் இருக்கும் சொற்கள் ஏராளம். அது தனித்த ஆய்வுக்கான தொகுதி. இந்த வகையில் சில ஆங்கிலச் சொற்பிரயோகங்களும் உண்டு. அடிப்படை ஆங்கில அறிவு பெற்றிராத வடிவேலு, பின்னாட்களில் ஆங்கில வார்த்தைகளை அதன் நேர்பொருளில் பயன்படுத்தினார். அந்த வார்த்தைகள் சினிமா வட்டாரத்தில் புழங்கும் ஆங்கில வார்த்தைகள். அவற்றைக் காட்சியின் நோக்கத்தைத் தெளிவாக உணர்த்தும்படிக்குப் பயன்படுத்தினார் என்பதுதான் சிறப்பு. அவற்றில் சில… ‘லுக்கு அங்க… லிப்பு இங்கயா?’, ‘என்னடா எல்லாம் நான்சிங்க்-ஆ இருக்கு’, ‘போங்க சார். நீங்க டைமிங்க மிஸ் பண்றீங்க’, ‘அப்ப நான் இப்படி ப்ரொஃபைல்ல நின்னு டர்ன் பண்றேன்’. இப்படி நீண்டுகொண்டே போகும்.

வடிவேலு எனும் நடிகன் தொடர்ந்து தன்னைச் சுற்றிப் புழங்கும் வார்த்தைகளைச் சூழலுக்குப் பொருத்தமாகக் கையாண்டவிதமும் சமூக அன்றாடங்களை உள்வாங்கி தனது பாணியில் சினிமாவுக்குள் பிரதிபலித்தவிதமும்தான் அவரை ஒரு நிகழ்காலத் தொன்மமாக்கியிருக்கிறது.

வடிவேலு எனும் நகைச்சுவை நடிகர் வெகுசிலரால் மட்டுமே எட்டக்கூடிய உச்சங்களை தன்னியல்பில் எட்டியவர். உள்ளபடியே அவர் இல்லாத தமிழ் சினிமா, அந்த ஆளுமை இன்மையின் வெறுமையை உணர்த்தியபடியே இருக்கிறது. திரையுலகின் மையப்புள்ளியை விட்டு அவர் அகன்று சில ஆண்டுகள் ஆகிவிட்டபோதும், அவருக்கான இடம் நிரப்பப்படாததாகவே உள்ளது.

வடிவேலுவின் திரை இருப்பு விலகலை எப்படிப் புரிந்துகொள்வது என்பதில் தெளிவில்லை. திரை வாய்ப்பு அறுபடும். கண்ணி, ஒரு நடிகர் வாழ்வில் அசாதாரணமானது. திரையின் தேவைகளை பார்வையாளர்களின் ரசனை வெளியை அதன் தேவைக்கு ஒப்ப வழங்கத் தவறும்போது நடிகனின் இருப்பு அற்றுப்போகிறது. இது அதிநாயக நடிகர்களுக்கும், உச்ச நட்சத்திரங்களுக்கும் நிகழ்ந்தபடி இருப்பதுதான். ஆனால், வடிவேலு எனும் நடிகன் உச்சத்திலிருந்து வெளியேறியது இப்படி நிகழவில்லை. மாறாக அந்த நடிகனின் இருப்பு வீர்யமாய் இன்னும் மேலெழுந்து புதிய உச்சங்களை நோக்கி நகர்ந்தவேளையில், இந்த விபத்து நேர்ந்தது.

இந்தப் புள்ளியில் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ நினைவுக்கு வருகிறார். தமிழ் சினிமாக் காவிய வரிசையிலான இந்தப் படம் வடிவேலு எனும் நடிகனை அவரது உச்சத்தில் கொண்டு நிறுத்தியது. அதற்கு அப்பாலும் அவரை முன்னகர்த்தும் திரைக்களங்கள் கண்டடையப்படாததே இந்த விபத்துக்கான காரணியாகக் கருதப்படுகிறது. தற்போது சவால் பொதுவானது. வடிவேலுவுக்கான திரைக்களங்களை இளம் இயக்குநர்கள் உருவாக்குவதும், அவற்றின் வழியாக வடிவேலு மீண்டு / மீண்டும் வருவது மட்டுமே இன்றைய உடனடித் தேவை.

தமிழ் ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுகையில் வடிவேலுவை சாப்ளினோடு ஒப்பிடுவது உண்டு. மிகையெனத் தோன்றினாலும் இந்த ஒப்பீட்டை நாம் அவ்வளவு எளிதில் நிராகரித்துவிடவும் முடியாது. நகைச்சுவை நடிப்பின் நுட்பங்களை, ஆகச்சிறந்த உடல்மொழி வழி வெளிப்படுத்தலை அறிந்தவர் சாப்ளின். சர்வதேச அளவிலான அரசியல் புரிதல் அவரிடம் இருந்தது. பகடியைவிட சிறந்த அரசியல் விமர்சனக் கருவி ஒன்று இல்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார். வடிவேலுவுக்கும் நகைச்சுவையின் நுட்பங்கள் பிடிபட்டிருக்கின்றன. உடல்மொழியில் இவரும் சளைத்தவர் அல்ல.

இன்றைய தமிழக அரசியலை வடிவேலு அளவுக்கு விமர்சித்தவர், கிண்டல் செய்தவர் யாரும் இல்லை. ஆனால், வடிவேலுவும் சாப்ளினும் வேறுபடக்கூடிய முக்கியமான இடம் எதுவென்றால், சாப்ளினுக்கு தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்ற தெளிவும் அரசியல் புரிதலும் இருந்தது. தனது கலை யாருக்கு எதிரானது, அது என்ன மாதிரியான விளைவுகளை சமூகத்தில் தோற்றுவிக்கும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும், அவர் தனது நகைச்சுவைக் கலையையும் அரசியலையும் ஓர் அறிவாகத் தொகுத்துக்கொண்டவர் சாப்ளின். ஆனால், வடிவேலுவுக்கு தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதும் எத்தகைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கலையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதும் முழுமையாகத் தெரியாது.

அதனாலேயே, அவரது அரசியல் மிகுந்த நகைச்சுவைக்கு எந்த நெருக்கடியும் யாராலும் எழவில்லை. ஆனால், சாப்ளின் திரைக்கு வெளியேயும் ஆளுமையாக இருந்தார். கலைக்கு வெளியே அவரது அரசியல் கருத்துக்களுக்காக நிறையப் பிரச்னைகளை எதிர்கொண்டார். வடிவேலு, திரைக்கு வெளியே குறிப்பிடும்படியான கருத்தியல் கொண்ட ஆளுமை அல்ல. அவரது தமிழக அரசியல் மேடை நுழைவுகள் அபத்த நிகழ்வுகளாக அமைந்தன. ஆனாலும் முதலில் குறிப்பிட்டதைப்போலவே இருவரும் மக்களின் நாயகர்கள், மக்களை அனைத்து கவலைகளில் இருந்தும் தங்களது நகைச்சுவையால் மீட்டுக்கொண்டிருப்பவர்கள் என்ற அளவில் இந்த ஒப்பீட்டை நாம் முற்றிலும் மறுக்க முடியாது.

வடிவேலு தமிழ்ச் சமூகத்தின் சாமன்ய மனிதர்களின் மனசாட்சியாக தன்னை வரிந்துகொண்டார். விளைவாக, தன்னையுமறியாமல் மக்களின் கலைப்பிரதிநிதியாக அவர் வெளிப்பட்டார். அதனாலேயே கால்நூற்றாண்டு காலமாக மக்கள் தங்களது அத்தனை அழுத்தங்களில் இருந்தும் விடுவித்த ‘உளவியல் வைத்தியராக’ வடிவேலுவைக் கொண்டாடுகிறார்கள். தன் நகைச்சுவை வார்த்தைகளைக் குறிப்பிடாமல், நினைவுகூராமல் தமிழர்கள் யாரும் ஒரு நாளைக் கடக்க முடியாது என்பதாகிவிட்ட சூழலைச் சாத்தியமாக்கியிருக்கும் வடிவேலு, நிச்சயமாக இந்த நூற்றாண்டின் சிறந்த தமிழ்க் கலைஞர்களில் ஒருவர்.

வடிவேலுவை பார்ப்பவர்கள் எப்போது ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்ப்பதில்லை. அதற்கும் பல படி மேலே சென்று அவர், ஒரு மாபெரும் குணச்சித்திர நடிகனும் கூட.அப்படித்தான் கொண்ட்டாடுகிறார்கள் அவரது ரசிகர்கள். பல கதாநாயகர்களும், நகைச்சுவை நாயகர்களும் குணச்சித்திரமான நடிப்பில் அவ்வளவாக சோபிக்கவில்லை. ஆனால் குணச்சித்திர நடிப்பில் நடித்த தன்னை எந்த பாத்திரைத்தையும் ஏற்று நடித்து ரசிகர்களை கிரங்கச் செய்ய வல்ல நடிகனாக நிரூபித்துக்கொண்டார். அதே போன்று, வின்னர், கிரி, மருதமலை, வில்லு, என்று நீண்டு கொண்டே செல்லும் படங்களின் பட்டியலில் அவை அனைத்தும் வடிவேலு என்ற ஒற்றை நடிகனின் நகைச்சுவையால் ஓடியவை. வடிவேலுவின் நடிப்பை பார்க்கவே திரையரங்குகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் சென்ற நிலையை உருவாக்கினார் வடிவேலு. இந்த வரிசையில் 2006 ஆண்டு தமிழ் சினிமாவின் கதாநாயக மன்னனாக உருவெடுத்தார் வடிவேலு.

அது நடந்த படம் 23ம் புலிகேசி, இது தொடர்ந்து அடுத்தடுத்த அவரின் நாயக அவதார படங்களான 2008ல் வெளியான இந்திரலோகத்தில் நா அழகப்பன், 2014ம் ஆண்டு வெளியான தெனாலிராமன், 2015ல் வெளியான எலி ஆகிய திரைப்படங்கள் அவ்வளவாக ஓட வில்லை. ஆனாலும் காமெடி காட்சிகளில் தொடர்ந்து கலக்கிக்கொண்டிருந்தார் வடிவேலு. அவரின் அந்த கலக்கல் பயணத்தில் 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆம், அந்த தேர்தலில் அஇஅதிமுகவுடன் முதன்முறையாக கூட்டணி வைத்திருந்த விஜயகாந்தை எதிர்க்கட்சியான திமுக மேடைகளில் நின்று கொண்டு, ஏறிய மேடைகள் அனைத்திலும் விமர்சித்தார்.

இதற்கு பிரகான தேர்தல் வெற்றி வடிவேலு வாழ்க்கையை திசைதிருப்பிய சம்பவம். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருக்க வடிவேலுவை தங்களது படத்தில் நடிக்கச் செய்தால் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் வடிவேலு வீட்டு வாசலில் கால்ஷுட்டுக்காக காத்திருந்த இயக்குனர்கள் அவரை படங்களில் புக் செய்ய தயங்கினர். இதனால் 200க்கும் மேற்பட்ட திரப்படங்கள் வடிவேலுவின் கையை விட்டு போனதாக கூறப்படுகிறது.

வடிவேலுவின் நடிப்புக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் சிறிப்பு அன்றாடம் கிடைக்கும் விருதுகள் என்றால் அவருக்கு திரையுலகத்தால் கிடைத்த விருதுகளும் இருக்கத்தான் செய்கிறது. ஆம் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார் வடிவேலு. காலம் மாறிப்போச்சு, வெற்றிக் கொடி கட்டு, தவசி , இம்சை அரசன் 23ம் புலிகேசி, காத்தவராயன் போன்ற படங்களில் சிறப்பான நடிப்பிற்காக விருதுகளை பெற்றுள்ளார் வடிவேலு. மேலும் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதை 2005-ம் ஆண்டில் வெளியான சந்திரமுகி திரைப்படத்திற்காகவும் வென்றுள்ளார்.

“நெறய பேர் சொல்ராங்க இந்த வடிவேலு ரொம்ப நாள் கழிச்சி படத்துல நடிக்கிறதா, ஆனா இந்த வடிவேலுக்கு எப்பவுமே கேப்பும் கடையாது, ஆப்பும் கிடையாது. எப்பவுமே டாப்பு தான்” கத்திச் சண்டை பட இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு பேசிய வார்த்தைகளே இவை. இந்த வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் வைராக்கியம்தான் திரைத்துறையிலிருந்து அவர் தள்ளியிருக்க காரணமாயிற்று என்கின்றது என்கின்றனர் அவரை அறிந்தவர்கள்.

ஆனால் சினிமாவில் சில ஆண்டுகளாக தலை காட்ட முடியாவல் இருந்த வடிவேலுவின் இடத்தை மீம்ஸ்களால் நிறப்பிய மீம்ஸ் கிரியேட்டர்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வடிவேலு, யாருக்கிட்ட சொல்றதுனு தெரியல, என்ன சொல்றதுனு தெரியல ரொம்ப சந்தோசமா இருக்கு, சினிமாவுல பட வாய்ப்பு குறைவா இருக்கறதா நிறைய பேரு சொல்றாங்க ஆனா அந்த இடத்த நிறப்பனதே மீம்ஸ் கிரியேட்டர் பிள்ளைகள்தான் என்று மனம் திறந்த வடிவேலு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நன்றியும் தெரிவித்திருப்பார்.

வடிவேலுவின் இந்த வெகுளித்தனமும், வீராப்பான பேச்சும்தான் 34 ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் அவரை நகைச்சுவை மன்னனாக வைத்திருக்கிறது என்கின்றனர் அவரை அறிந்தவர்கள். உண்மையில் அடுத்த வடிவேலு ஒருவர் உருவாக வாய்ப்புள்ளதா என்பது சந்தேகப்படும் ஒன்றாக இருந்தாலும், தற்போது புதுபுது படங்களில் இணைந்துள்ளதன் மூலம் அவரே தனது அடுத்த அவதாரங்களை ஏற்கவும் இருக்கிறார். வடிவேலு என்ற உண்ணதக் கலைஞ்சன் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், இன்றைய நவீன வாழ்விலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்க்கு தனது நகைச்சுவையால் மருந்தளித்துக்கொண்டிருக்கும் வைகைப்புயல் வடிவேலு என்றுமே மன்னாதி மன்னன்தான் என்பதில் சந்தேகம் இல்லை…

 

எழுத்து: யுவராம் பரமசிவம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.