இரண்டு நாளாக சுரங்கப்பாதையில் சிக்கியவர்கள் நிலை என்ன? – தெலங்கானா அமைச்சர் அதிர்ச்சி பதில்!

இரண்டு நாளாக சுரங்கப்பாதையில் சிக்கியவர்கள் நிலை குறித்து தெலங்கானா அமைச்சர் அதிர்ச்சிகரமான பதிலளித்துள்ளார்.

தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் இருந்து பிற இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் உள்ளது.

இந்த கால்வாயின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி  தண்ணீர் கொண்டு செல்லும் சுரங்கப்பாதை கூரை 14 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 3 மீட்டர் அளவுக்கு இடிந்து விழுந்தது . இதில் இரண்டு பொறியாளர்கள், இரண்டு எந்திர ஆபரேட்டர்கள் உட்பட 8 பேர் சிக்கினர். தொடர்ந்து இரண்டு நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் அம்மாநில அரசும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இன்று வரை தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தெலங்கானா அமைச்சர் கிருஷ்ண ராவ், விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட பின் செய்தியார்களை சந்தித்தார்.

 

அப்போது அவர் பேசியதாவது,  “ உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், சுரங்கத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிக மிக மிக குறைவு. ஏனென்றால், நான் சுரங்கம் இடிந்த 50 மீட்டர் பகுதி வரை சென்று  புகைப்படம் எடுத்தபோது, சுரங்கத்தின் முடிவே தெரியவில்லை.

சுரங்கப்பாதையின் 9 மீட்டர் விட்டத்தில், கிட்டத்தட்ட 30 அடிக்கு 25 அடி வரை சேறு குவிந்துள்ளது. நாங்கள் அவர்களின் பெயர்களை சொல்லி சத்தமாக அழைத்தும் பார்த்தோம். எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை.” என்று தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.