திமுகவின் உட்கட்சித் தேர்தலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்திற்கு முன்னர் நடத்தி முடிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மாவட்டச் செயலாளர் தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிகிறது. அது என்ன என்பதை பார்க்கலாம்.
திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி, கொரோனா காரணமாக தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதில் கிளை கழகத் தேர்தல் முழுவதுமாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கான தேர்தல் பெரும்பாலான இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகரங்களில் சென்னை, தாம்பரம், நெல்லை மற்றும் தஞ்சாவூர் தவிர மற்ற இடங்களுக்கான பகுதி செயலாளர் தேர்தலுக்கான வார்டுகள் வரையறை கடந்த வாரம் அக்கட்சி வெளியிட்டது. இந்த நிலையில் இக்கட்சியின் மாவட்டச் செயலாளர் தேர்தல் எப்போது நடத்தப்படும். ஏன் அவைகள் இன்னமும் நடத்தப்படாமல் உள்ளன என்பது குறித்து திமுக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பொறுத்தவரை உட்கட்சி தேர்தலை பிரச்சனைகள் இன்றி நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் பார்வையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உட்கட்சி தேர்தல் தொடர்பாக புகார் கூறுபவர்களிடம் விசாரணை நடத்த அக்கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தினந்தோறும் அறிவாலயத்திற்கு புகார்களுடன் வருகின்றனர். அவர்களது கருத்துக்களை கேட்கும் இக்குழுவினர், நீங்கள் ஊருக்கு செல்லுங்கள் நல்ல செய்தி வந்து சேரும் எனக் கூறி அனுப்பி வைத்து விடுகின்றனர். இதற்கிடையே இந்த குழுவினர் உட்கட்சி தேர்தலில் எங்கு தவறு நடந்துள்ளது என்பது குறித்த தகவல்களை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்கின்றனர்.
அதில் முக்கிய புகார்களை முதல்வரே நேரடியாக பார்ப்பதால் தேர்தல் நடத்துவதில் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பிரச்சனையும் முழுமையாக ஆராய்ந்து அவர்களின் புகார்களுக்கு தீர்வு கண்டபின்னர் அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்துங்கள் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும், திமுக தலைமையை பொறுத்தவரை திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதிக்கு முன்னர் தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது . ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் புகார் வந்ததால் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் திமுக மூத்த நிர்வாகிகள்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலை பொறுத்தவரை எல்லா இடங்களிலுல் பேசித் தீர்த்து ஒருமித்த கருத்தை உருவாக்க மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதுதான் தேவையற்ற சர்ச்சையை தவிர்க்கும் என்றும், ஆட்சியில் இல்லாதபோது தம்மோடு கஷ்டபட்ட எந்த மாவட்டச்செயலாளரையும் விட்டுவிடக்கூடாது என அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. மிகவும் மோசமாக செயல்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஒரு சிலரை மட்டும் நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வரும் எனத்தெரிகிறது. வரும் ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி நினைவு தினம் வருகிறது. அதற்கு முன்னர் மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் நடத்தி முடித்துவிட்டு பொதுக்குழுவையும் கூட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இராமானுஜம்.கி








