விமான விபத்தின் கடைசி தருணங்களையும், விபத்துக்கான காரணங்களையும் கண்டறிய உதவுவது கறுப்புப் பெட்டி. விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ள கறுப்பு பெட்டியின் பயன்பாடுகள் என்ன என்பதை தற்போது காணலாம்.
கறுப்பு பெட்டி என்பது விமானத்தினுள் நடைபெறும் தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு தொழில்நுட்பக் கருவியாகும். விமானம் விபத்திற்குள்ளாகும்போது, அது தொடர்பான காரணங்களை அறிவதற்கும், ஆராய்வதற்கும் இந்த கருவி பெரிதும் உதவும்.
இதனை கருப்புப் பெட்டி என்று அழைத்தாலும், இது செம்மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்த கறுப்பு பெட்டி விமானத்தின் சேதம் குறைவாக ஏற்படும் பின்பகுதியில் இவை பொருத்தப்பட்டிருக்கும்.
விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பொருத்தப்படும் கறுப்புப் பெட்டியில் இரு பகுதிகள் உள்ளன. கறுப்பு பெட்டியின் ஒரு பகுதி விமான ஒட்டியின் அறையில் நிகழும் உரையாடல்களை பதிவு செய்யும்.
மற்றொரு பகுதி விமானத்தின் வேகம், பறக்கும் உயரம், திசை, காலநிலை தகவல் முதலிய விமானத்தின் தொழில்நுட்பத் தகவல்களை பதிவு செய்யும். டைட்டானியம் என்ற தனிமத்தால் செய்யப்பட்ட இவை புவிஈர்ப்பு விசையை விட 3 ஆயிரத்து 400 மடங்கு விசையையும், ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் தாங்கக் கூடியது.
விமானம் விபத்துக்குள்ளானாலும் கருப்புப் பெட்டியிலிருந்து தொடர்ந்து சமிக்கைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை கறுப்பு பெட்டியில் இருந்து சைகைகள் வரும். இது சுமார் 13 பவுண்டுகள் எடையைக் கொண்டவையாகும்.
தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். உவர் நீரில் ஊறினாலும் கறுப்பு பெட்டி பாதிப்படையாது.
கடலுக்குள் மூழ்கினாலும் மூன்று மாதங்களுக்கு கறுப்பு பெட்டி பழுதடையாது. ஆகாயத்தில் இருந்து வீழ்ந்தாலும் கறுப்பு பெட்டி உடையாது.
எங்கு வீழ்ந்தாலும் அவ்விடத்தில் இருந்து தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும். வெளிப்புற, உட்புற தாக்கத்தினால் சேதமடையாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ள கறுப்பு பெட்டியும், அதன் தகவல் சேமிப்பு நாடாவும் பாதுகாக்கப்படுகின்றன.
தண்ணீரில் விழுந்து நீண்ட நாட்களாக மிதக்கும் தன்மையுடைய கறுப்பு பெட்டியை எளிதில் திறக்கும் வகையிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நீடித்து வருகிறது.








