ஒடிசா ரயில் கோர விபத்துக்குள்ளாகி பெரும் உயிர் சேதத்தை சந்தித்த நிலையில் அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நடைபெற்று வருகின்றன. என்னதான் ஆச்சு இந்திய ரயில்வே துறைக்கு என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு
நம் வீட்டில் தொடர்ந்து ஒரு கெட்டது நடக்கிறது என்றால் ஓன்னு யாராவது வைத்த கண்ணாக இருக்கும், அல்லது நேரம் சரியில்லை என வீட்டு பெரியோர் சொல்லுவர். அதற்கு எக்கச்சக்க பரிகாரங்கள் உட்பட பல வழிபாட்டு தலங்களுக்கு செல்வது நம்மில் பலரின் பழக்கமாகும்.
சமீபமாக நடந்த ஒடிசா ரயில் விபத்து பலரின் உயிரை காவு வாங்கிய நிலையில் இந்த ஒற்றை ரயில் விபத்தை கவனித்த நம்மில் பலபேர் அதற்கு பின் நடந்த ரயில் விபத்துக்களை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டோம். ஆண்டாண்டு காலமாக ரயில் விபத்துகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன என்றாலும், இப்பொழுது தினமும் நடக்கிறது. ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து இந்தியன் ரயில்வேயில் தொடர்ந்து 11 நாட்களாக நடந்த ரயில் விபத்துகளின் தொகுப்பை தற்போது காணலாம்.
ஜூன் 2 அன்று கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி பயணித்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி தடம்புரண்டது, சற்று நேரம் கழித்து பெங்களூருவிலிருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த யஷ்வந்த்பூர் ஹவுரா எக்ஸ்பிரஸ் ஏற்கனவே தடம்புரண்டுள்ள கோரமண்டல் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த ரயில்களில் பயணித்த பல்வேறு மாநிலத்தை சார்ந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர், 900 மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு பல்வேறு நாடுகளை சார்ந்த தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இது குறித்து நியூஸ் 7 தமிழின் களத்தில் சென்று பல்வேறு தகவல்களை சேகரித்து நேரலை செய்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேச மாநிலம் – ஜபல்பூர் ரயில் விபத்து :
மக்களின் மனதில் ஒடிசா ரயில் விபத்தின் சோக தீ அணைவதற்கு முன் சரியாக 4 நாட்களுக்கு பிறகு, மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ஜூன் 6 இரவு பிடோனி ரயில் நிலையத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது, இரண்டு எண்ணெய் டேங்கர்கள் தண்டவாளத்தின் தடத்திலிருந்து கீழே இறங்கின. இதனால் எந்தவித உயிர் சேதமும் இல்லை, பெரிய அளவில் பொருட்சேதமும் இல்லை என மத்திய மேற்கு ரயில்வே துறையினர் தெரிவித்தனர்.
ஜூன் 6 அன்று ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் சந்திப்பு பகுதியில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்த வேளையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் அடியில் அங்கு ரயில்வே வேலை செய்துகொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் ஒதுங்கினர், இந்நிலையில் அதிக காற்று மற்றும் இடி காரணமாக எஞ்சின் இணைக்கப்படாத ரயில் நகர்ந்தது. இதில் 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். இது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 08 அன்று, ஒடிசா மாநிலம் மஞ்சூரி ரோடு ஸ்டேஷன் பகுதியில் ரயில் தண்டவாள இன்டர்லாக் நடுவில் ஒரு பாறாங்கல் சிக்கியிருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. அந்த பாறாங்கல் அகற்றப்படாமல் இருந்திருந்தால் மீண்டும் ஒரு ரயிலாந்து தடம் புரண்டு மற்றொரு ரயில் விபத்து நம் கண் முன்னே அரங்கேறியிருக்கும் அவலம் ஏற்பட்டிருக்கும். தற்செயலாக அதை பார்த்த ரயில்வே ஊழியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சிறிது நேரத்தில் பாறாங்கல் அகற்றப்பட்டது. இதுகுறித்து, மஞ்சூரி ரயில்வே நிலைய மேலாளர், ஆர்.பி.எப்., அலுவலகத்தில் புகார் அளித்ததை அடுத்து, ஆர் பி எப் இன்ஸ்பெக்டர் திலிப் குமார் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
திருச்சி வாளாடி ரயில் நிலையம் :
இத்தனை ரயில் சம்பவங்கள் நடந்த வட இந்தியாவின் பங்கு ஒரு பக்கம் இருக்க, தென் இந்தியாவின் பங்கும் உள்ளது. ஒடிசா ரயில் விபத்து நடந்த அதே நாள் நமது தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் தான் அந்த விபத்து நிகழ்ந்திருக்க வேண்டியது, ஆனால் நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது. கன்னியகுமரியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் திருச்சியை அடுத்த வாளாடி ரயில் நிலையத்தை கடக்கும்பொழுது லோகோ பைலட் ரகுராமன் தண்டவாளத்தில் ஏதோ இருப்பதை கண்டு பிரேகை போட்டார். ரயில் சற்று கிட்டே சென்று பார்க்கும்பொழுது தான் தெரிகிறது. அது லாரி டையர் என்று இருப்பினும் அந்த ரயில் டையரை மோதுகிறது இதனால் ரயிலுக்கும் மின்சாரம் தடைபடுகிறது. பின்னர் சிக்கியிருந்த லாரி டயரை அகற்றியப்பின் அதிகாலை 2 மணிக்கு அந்த ரயில் கிளம்பி சென்னைக்கு சென்றது.
மேட்டுப்பாளையம் – உதகை ரயில் (TOY Train ) :
ஜூன் 8 அன்று இத்தனை வருட காலமாக நன்றாக செயல்பட கொண்டிருந்த மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை செல்லும் மலை ரயில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்கையில் மாலை 4.20 மணி அளவில் தடம் புரண்டது, இந்த ரயில் மிகவும் மெதுவாக சென்றதால் எந்த ஆபத்தும் நிகழவில்லை. இதனால் எந்த உயிர் சேதமோ பொருட்சேதமோ நடைபெறவில்லை என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ரயில் ஆங்கிலத்தில் TOY TRAIN என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா துர்க்-பூரி எக்ஸ்பிரஸ் :
ஜூன் 8 அன்று ஒடிசா மாநிலம் நௌபாடா மாவட்டத்தில் பயணித்துகொண்டிருந்த துர்க்-பூரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு 10 மணி அளவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளுக்கு லேசாக கருகும் வாடை அடிக்க, பயணிகள் உடனடியாக பிரேக் செயினை பிடித்து இழுத்தனர். இதில் சரியாக செலுத்தப்படாத பிரேக்குகள் இருந்து, தீ பொறிகளும் கரும்புகையும் வெளிவர ஆரம்பித்தது. ரயில் நிறுத்திய பிறகு சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “உராய்வு மற்றும் பிரேக் முழுமையடையாததால் பிரேக் பேட்கள் தீப்பிடித்தன. தீ பிரேக் பேட்களில் மட்டுமே பரவியதால் எந்த சேதமும் இல்லை” என கூறப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் காயமோ, உயிர் சேதமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
ஜூன் 9 அன்று விடியற்காலை 2.30 மணியளவில் விஜயாடாவிலிருந்து சென்னை வந்த ஜன்சதாப்தி ரயில் பயணிகளை இறக்கிவிட்டு பேசின் பிரிட்ஜ் யார்டுக்கு திரும்பி போகும் வழியில் தடம்புரண்டது. பயணிகள் யாரும் இல்லததால் எந்த பாதிப்புமில்லை. இந்த விபத்தினால் எந்த ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை
ஜூன் 10 அன்று சென்னையை அடுத்த திருநின்றவூர் ரயில் நிலையதிற்கு அருகே இருந்த ரயில் தண்டவாளத்தில் 42 வயதான பாபு என்பவர் மது போதையில் ஒரு தென்னை மரத்தை வைத்து விட்டு அங்கே மர்மமான முறையில் சுற்றிவந்தார். அங்கே வந்த லோக்கல் ரயிலை இயக்கிய லோகோ பைலட் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார். இதன் மூலமாக பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. போலீசார் பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு14 நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ஜூன் 11 அன்று சென்னையிலிருந்து திருவள்ளூர் மார்க்கமாக சென்ற பயணிகள் மின்சார ரயில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே காலை 9.40 மணியளவில் தடம்புரண்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாயினர். தகவல் தெரிந்ததையடுத்து அதிகாரிகள் விசாரணை செய்து, சீர்செய்த பிறகு வழக்கம் போல் ரயில் இயக்கப்பட்டது.
பொதுவாக அலைச்சல் இருக்காது, டிக்கெட் விலை குறைவு மற்றும் விரைவாக செல்ல முடியும் உட்பட பல காரணங்களால் நாம் ரயில் போக்குவரத்தை விரும்பி தேர்வு செய்வதுண்டு, இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் சிறிய அளவில் பீதியை கிளப்புவதாகவே இருக்கிறது. உலக அரங்கில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது, இந்நிலையில் இது போன்ற தொடர் ரயில் விபத்து சம்பவங்களால் ஒடிசா மாநிலத்திற்கு திருஷ்டி சுத்தி போட வேண்டுமா அல்லது ஒட்டுமொத்த இந்தியன் ரயில்வேசுக்கே சுத்தி போடவேண்டுமா என, மக்கள் கேட்கும் வண்ணம் உள்ளனர்.
ஆண்ட்ரூ, நியூஸ் 7 தமிழ்













