பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்த நிலையில் இந்த சட்டம் எப்போது இயற்றப்பட்டது, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களை கண்டறிவதற்கான வரையறைகள் என்ன என்பதை காண்போம்.
எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி பிரிவை சேராத பொதுப் பிரிவில் உள்ள சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி7ந்தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அப்போது இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினர் ஏற்கனவே பெற்று வரும் இடஒதுக்கீட்டிற்கு சிறிதளவும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த சட்டடம் இயற்றப்படும் என அப்போது மத்திய அமைச்சர்கள் விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து இந்த இடஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சாசன சட்டத் திருத்தம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இந்த அரசியல் சாசன சட்டதிருத்த மசோதா வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது 323 எம்.பிக்கள் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த மசோதாவிற்கு அப்போது குடியரசு தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டம் அலுக்கு வந்தது.
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை நிர்ணயம் செய்வதற்கான வரையறைகள் என்ன?
கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்புகளில்10 சதவீத இடஒதுக்கீட்டினை பெற விரும்பும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
1.எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி ஆகிய பிரிவுகளில் வரும் இடஒதுக்கீட்டு சலுகைகளை பெறாத பொதுப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
2. குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3. 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல் விவசாய நிலங்களை வைத்துள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது.
4. ஆயிரம் சதுரஅடி மற்றும் அதற்கு மேலான அளவு கொண்ட வீட்டினை பெற்றிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது.
5. நகர பகுதிகளில் 100 சதுர யார்டு மற்றும் அதற்கு மேலான அளவு வீட்டுமனையை பெற்றுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது.
6 கிராமப்புற பகுதிகளில் 200 சதுர யார்டு மற்றும் அதற்கு மேலான அளவுடைய வீட்டுமனையை பெற்றுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது.







