திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆடு சந்தையில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு இன்று இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆடு சந்தை வாரம் தோறும் திங்கள் கிழமையில்
ஆடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று விற்பனைக்காக ஏராளமான ஆடுகள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர்.
நாளை மறுதினம் தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால், போளூர் சந்தையில் ஆடுகள்
நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக ஆந்திரா மாநிலம் நெல்லூர், சித்தூர், சத்தியவேடு, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், விழுப்புரம், திருச்சி, தேனி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் போளூர் ஆட்டு சந்தையில் ஆடுகளை வாங்க குவிந்ததால் ஆடுகளின் விலை கடுமையாக ஏற்றம் கண்டது.
ஒரு ஆடு விலை ரூபாய் 20 ஆயிரத்தில் இருந்து ரூ.50,000 வரை விற்பனையானதால் ஆட்டின்
உரிமையாளர்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் போளூர் சந்தையில் இன்று 2 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.







