உத்தரகாண்ட் பாஜக முதல்வர் திடீர் ராஜினாமா!

உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தினை ஆளுநர் பேபி ராணி மௌரியாவிடம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில…

உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தினை ஆளுநர் பேபி ராணி மௌரியாவிடம் கொடுத்துள்ளார்.

இச்சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் முதல்வர் மீதான அதிருப்தியடைந்துள்ள எம்.எல்.ஏக்கள் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வந்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று டெல்லி சென்று பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து வந்திருந்த திரிவேந்திர சிங் இன்று தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

முன்னதாக 2017ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்த 69 தொகுதிகளில் 57 தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியமைத்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 11 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த திரிவேந்தர சிங் இன்று ராஜினாமா செய்துள்ளார். பாஜக தன்னை முதல்வராக ஆக்கிய இந்த நான்கு ஆண்டு தன்னுடைய வாழ்நாளில் பொற்காலம் என்று குறிப்பிட்டுள்ளார். கிராமபுற பின்னணியிலிருந்து வந்த என்னை ஒரு முதல்வராக்கிட பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே முடியும் என்று கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த திடீர் மாற்றம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.