நட்போ, பகையோ கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்த அறிக்கைக்கு, 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என, தமிழ்நாடு அரசு, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முடியாது என காவிரி மேலாண்மை வாரியம் விளக்கம் அளித்தது. மேகதாதுவில் அணை கட்டி 66 டிஎம்சி தண்ணீரை தேக்கினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராது, தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதில் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சரும், நீர் மேலாண்மை அமைச்சருமாக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அதன்பிறகு மேகதாது அணை விவகாரம் மீண்டும் தமிழ்நாடு-கர்நாடக அரசியலில் சர்ச்சையாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து ”மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன்” என டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு, கர்நாடக துணை முதலமைச்சரும், நீர் மேலாண்மை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அணை கட்டுவது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தின் மூலம் சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
https://twitter.com/news7tamil/status/1680138317793460224
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், பத்திரிக்கையாளர்கள் மேகதாது விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் “நட்போ, பகையோ கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்தார்.







