உயர்ந்த இடத்துக்கு உயர்த்திய மக்களை நாம் எப்போதும் மறக்கக் கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதி கட்டடங்களை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இதேபோல தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப மையங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும் 2022-ஆம் ஆண்டிற்கான குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சான்றிதழ்களை வழங்கி அவர்களைப் பாராட்டி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது;
உயர்ந்த பதவி என்பது பன்மடங்கு கடமையை உள்ளடக்கியது என்பதே உண்மை. உயர்ந்த இடத்துக்கு நம்மை உயர்த்திய மக்களை நாம் எப்போதும் மறக்கக் கூடாது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ 1,000 கிடைக்கவுள்ளது. யாருக்கெல்லாம் ரூ 1,000 அவசியத் தேவையோ அவர்களுக்கெல்லாம் கிடைக்கும்.
எந்த சிக்கலும் இல்லாமல் நிறைவேற்றத் திட்டம். என் முழு கவனமும் இதில்தான் உள்ளது. நாடி வரும் ஏழை – எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது. மக்கள்தான் நமக்கு மேலதிகாரிகள். இத்தோடு போதும் என்று படிப்பை நிறுத்திவிடாதீர்கள். சமூகத்தைப் பற்றியும் படியுங்கள். பல்வேறு பணிகளில் பொறுப்பேற்கவுள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா









