“ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி!

ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழக ஆம்னி பேருந்துகள் மீது அண்டை மாநில அரசுகள் அபராதம் விதிப்பதால் அவர்களது தொழில் நலிவடையும் நிலையில் உள்ளதாகக் கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் 9.11.2025 இரவு முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால் தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

எனவே, திமுக அரசின் போக்குவரத்துத்துறை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.