மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம் ஆனால் தமிழ்நாட்டில் அந்த கூட்டணியில் பாமக இல்லை என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தின் போது கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள,
பாமக-வை சேர்ந்த 18 பேரை அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
மண்ணுக்கும், மக்களுக்குமாக போராடிய பாகமவை சேர்ந்த 55 பேரை
காவல்துறை கைது செய்துள்ளது, கைது செய்யப்பட்ட பாமகவினரை விடுவிக்க வேண்டும்,
என்.எல்.சி க்காக தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்த கூடாது, என்.எல்.சி
நிலக்கரி எடுத்த பின்னர் நிலங்களை அழித்து வருகிறது, தமிழகத்தில் இனி நிலக்கரி
சுரங்கம் அமைக்கப்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 மாதங்களுக்கு முன் அறிவித்தார்.
3 போகம் விளையும் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. என்.எல்.சியின் 3-ஆவது சுரங்கம் அமையுமா? அல்லது அமையாதா? என தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். என்.எல்.சி பிரச்னை தமிழக மக்களின் பிரச்னை, விளை நிலங்களை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும், தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது. என்.எல்.சி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறது. என்.எல்.சி நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு ஏன் உதவியாக உள்ளது என தெரியவில்லை.
பாமக அரசியல் நோக்குடன் போராட்டம் நடத்தவில்லை, மண்ணுக்கும், மக்களுக்கும் பிரச்னை என்றால் பாமக போராடும். ராகுல்காந்திக்கு கிடைத்த தண்டனை மிகப்பெரிய தண்டனை. சாதாரண வழக்கில் ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டது. ராகுல்காந்தி வழக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை.
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறது,. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கவில்லை. 2026 ல் ஒரு மித்த கருத்துடன் உள்ள கட்சிகளுடன் பாமக தேர்தலை சந்திக்கும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.







