வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு 90நாட்களாகியும் மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். வயநாட்டில் உள்ள ஒன்றிரண்டு கிராமங்கள் முற்றிலுமாக உருக்குலைந்தன.

இந்த நிலையில் அந்த கிராமங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை மறுசீரமைக்கவும் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக நிதி ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வைிட்டு மத்திய அரசு போதுமான உதவிகளை செய்யும் என உறுதியளித்திருந்தார்.
வயநாடு இடைத் தேர்தலில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு அரசியலாக்குவதாகவும், பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்துவது கேவலமானது என விமர்சனம் செய்திருந்தார். இதேபோல பல கேரள மாநில அரசியல் கட்சியினர் வயநாடு விவகாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரள மாநிலம் உருவான 68-வது தினம் கேரளப்பிரவி விழாவில் கலந்து கொண்ட கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது..
” வயநாடு நிலச்சரிவு சம்பவம் நடைபெற்று 90 நாட்கள் ஆகியும் மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு மத்திய அரசு ஒற்றை பைசா கூட ஒதுக்காதது கொடூரமான புறக்கணிப்புக்கு உதாரணமாகும். மற்ற மாநிலங்கள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும்போது, அந்த மாநிலங்கள் கேட்பதற்கு முன்னதாகவே மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. அனால் கேரளா உதவி கேட்டபோதிலும் ஒதுக்கப்படுவதில்லை.

மத்திய அரசின் இந்த புறக்கணிப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது. கேரள உயர்நீதி மன்றமும், மாநில சட்டமன்றமும், மத்திய அரசுக்கு 1202 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் என வலியுறுத்திய போதிலும், மத்திய அரசு தர தயாராக இல்லை. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி மீது அக்கறை காட்டவில்லை” என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.







