உரிய நேரத்தில் உரிய காலத்தில் வி.கே சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
சென்னை திநகரில் உள்ள சசிகலா இல்லத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் வருகை தந்திருந்தனர். கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாக தொண்டர்களை சந்திக்காமல் இருந்த சசிகலா இன்று தன்னுடைய இல்லத்திற்கு வந்திருந்த தொண்டர்களை சந்தித்து பேசினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சசிகலாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சசிகலா ஆதரவாளருமான நரசிம்மன், அதிமுகவில் சிலர் சுயலாபத்திற்காக செயல்பட்டு வருவதாகவும் இது சில காலம் மட்டுமே நீடிக்கும் என தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிந்த பிறகு உரிய நேரத்தில் உரிய காலத்தில் வி.கே சசிகலா அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார் எனவும் நரசிம்மன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வி.கே.சசிகலா அதிமுக அலுவலகத்திற்கு வருவார் என நரசிம்மன் பேசி இருப்பது அதிமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
– இரா.நம்பிராஜன்








