நடிகர் விவேக் வசித்து வந்த பகுதியை ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ என பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணர், கலைமாமணி, பத்மஸ்ரீ விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி இம்மண்ணை விட்டு பிரிந்தார். அவரின் நினைவாக அவர்தம் வசித்து வந்த சென்னை மாநகராட்சி, 128-வது வார்டில் அமைந்துள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையினை அப்பகுதி வாழ் மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சின்னக் கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்திட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேலும் முதலமைச்சர் அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் துணைத் தலைவர் பூச்சி முருகன், கடந்த ஏப்ரல் 18-ம் தேதி கோரிக்கை கடிதம் வழங்கினார். அதில், மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கை பெருமைப்படுத்தும் விதமாக ஏதேனும் ஒரு சாலை அல்லது தெருவிற்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில், மறைந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் சின்னக் கலைவாணர், கலைமாமணி, பத்மஸ்ரீ விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலையினை மாமன்றத்தின் பின்னேற்பு அனுமதிக்குட்பட்டு சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்ய மேயர் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.







