இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிற்கு ரூ.14 கோடி கட்டணமாக பெறுகிறார் என்று வெளியான தகவல் பொய் என தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் ‘இன்ஸ்டாகிராம்’ உலகளவில் முக்கிய சமூக ஊடகத் தளமாக இருந்து வருகிறது. பயனா்கள் தங்களின் புகைப்படங்கள், விடியோக்களைப் பதிவாகப் பகிரும் வசதி கொண்ட இன்ஸ்டாகிராம் தளத்தை உலகம் முழுவதும் 235 கோடி போ் பயன்படுத்துகின்றனா். திரைப்பிரபலங்களில் தொடங்கி விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இந்த செயலியை உபயோகப்படுத்துகின்றனர்.
இதில் இந்திய அணியின் மிக முக்கியமான பேட்ஸ்மேன் விராட் கோலியும் ஒருவர். இன்ஸ்டாகிராம் தளத்தில் விளம்பரப் பதிவுகள் மூலம் அதிகம் வருமானம் ஈட்டும் முதல் 100 பிரபலங்கள் குறித்த தகவல்கள் அடங்கிய ‘இன்ஸ்டாகிராம் ரிச் லிஸ்ட்-2023’ பட்டியலைப் பிரிட்டனை ‘ஹுப்பா் எச்.கியூ.’ வெளியிட்டுள்ளது. கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த பட்டியலில் முதலிடத்திலும், அவரது பரம எதிரியான லியோனல் மெஸ்ஸி இரண்டாவது இடத்திலும் உள்ளார்.
இதில் உலக அளவில் டாப் 20 பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெறுகிறார் என கூறப்பட்டது. அவர், புகைப்படம் மற்றும் வீடியோ பிளாக்கிங் தளமான Instagram இல் அதிக வருமானம் ஈட்டும் இந்தியராக இருக்கிறார் என தகவல் வெளியானது. விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஒவ்வொரு ஸ்பான்சர் செய்யப்பட்ட பதிவிற்கும் ரூ.14 கோடி கட்டணமாக பெறுகிறார் என அண்மையில் கூறப்பட்டது.
https://twitter.com/imVkohli/status/1690219873509777409
இந்நிலையில் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் மிகுந்த நன்றியுடனும் கடன்பட்டவனாகவும் இருக்கிறேன். சமூக ஊடங்களின் மூலமாக நான் ஈட்டும் வருமானம் குறித்து பரவும் செய்திகள் உண்மையில்லை” எனக் கூறியுள்ளார்.







