விநாயகர் சதுர்த்தி விடுமுறையை செப்டம்பர் 18ம் தேதிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி திருவிழா வருகிற செப்டம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளதாகவும் எனவே செப்டம்பர் 17ம் தேதி ஞாயிற்றுக் கிழமையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமான விடுமுறை தினமாக அறிவித்திருந்தது. ஆனால் விநாயகர் சதுர்த்தி குறித்து தொடர்ந்து பல குழப்பங்கள் நிலவி வந்தன.
இந்த வருட விநாயகர் சதுர்த்தி விழாவில் 3 தேதிகளால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். ஜோதிடர்களின் கூற்றுப்படி விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி என தெரிவிக்கபட்டுள்ளது.
பொதுவாக அமாவாசையில் இருந்து 4ஆவது நாள்தான் சதுர்த்தி திதி வரும். அதன் அடிப்படையில்தான் ஆவணி மாத அமாவாசையில் இருந்து 4ஆம் நாளான செப்டம்பர் 18ஆம் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். செப்டம்பர் 18ஆம் தேதி காலை 11.28 மணிக்கு சதுர்த்தி தொடங்கி அடுத்த நாள் 19ஆம் தேதி 11.44 மணிக்கு முடிவடைகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 17ஆம் தேதி விடுமுறை அறிவிப்பை ரத்து செய்துவிட்டு 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கான விடுமுறையை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கபட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி விடுமுறை தொடர்பாக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 17ஆம் தேதி விடுமுறை என்ற அரசாணையை நீக்கிவிட்டு செப்டம்பர் 18 ஆம் தேதி விடுமுறை என்ற புதிய அரசாணையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.







