விழுப்புரம் | பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதரர்கள் – ஒருவர் உடல் மீட்பு!

விழுப்புரம் அருகே மூவர் பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24), இரட்டை சகோதர்களான விக்ரம்(23), சூர்யா(23)…

விழுப்புரம் அருகே மூவர் பக்கிங்காம் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24), இரட்டை சகோதர்களான விக்ரம்(23), சூர்யா(23) ஆகிய 3 சகோதரர்கள் இருந்தனர். கணேசனின் மகன்கள் மூன்று பேரும் நேற்று மாலை கடல் முகத்துவாரப் பகுதியான பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்க சென்றனர். சகோதரர்கள் 3 பேரும் கால்வாய் மேம்பாலத்தின் மீது அமர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக லோகேஷ் கால்வாயில் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற இருவரும், அண்ணனைக் காப்பாற்ற கால்வாயில் குதித்தனர். இதில் சகோதரர்கள் 3 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தகவலறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மாயமான 3 சகோதர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நீண்ட நேர போராடத்துக்கு பிறகு லோகேஷ் என்பவரின் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து மாயமான இரட்டையர்கள் விக்ரம், சூர்யாவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.