தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்த விக்ரம் படத்தின் ட்ரெய்லர் காட்சிகள் வெளியாகி இணையத்தையே அடித்து நொறுக்கி வருகிறது. மாநகரம் கைதி, மாஸ்டர் என தொடர் வெற்றிகளை கொடுத்த லோகேஷ், 4 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி அரசியல் அஞ்ஞானவாதம் மேற்கொண்டிருந்த கமலை கொண்டு இயக்குகிறார் எனும் செய்தியே அவரின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களுக்கும் goosbumb-ஐ கொடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து விஜய் சேதுபதி, ஃபகத் பாசிலும் படத்தில் நடிக்கிறார்கள், இசை ரவுடி அனிருத் இசையமைக்கிறார் என அடுத்தடுத்து வந்த அப்டேட்டுகளை கண்டு திக்குமுக்காடி போனது தமிழ் சினிமா!
படத்தின் first look, Title டீஸர், first glance வீடியோ , making வீடியோ என படக்குழு வெளியிட்ட அத்தனைக்காட்சிகளும் இணையத்தில் சென்சேஷன் ஆனது. இதையெல்லாம் கடந்து படம் வெளியாக 20 நாட்களே உள்ள நிலையில், படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார் என்ற தகவலோடு விக்ரம் படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் பரவியது. கடந்த சில மாதங்களாக வெளிவந்த உச்சநட்சத்திரங்களின் படங்கள் தமிழ் ஆடியன்ஸின் ரசனைக்கு சரியாக தீனி போடாத நிலையில், கமலின் விக்ரம் வந்துதான் அனைவரும் அன்லிமிடெட் மீல்ஸ் பரிமாறப்போகிறது எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பிரம்மாண்டமான ஏற்படுகளோடு கோலகலமாக அரங்கேறியது விகரம் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா. ஞாயிற்று கிழமை அதுவுமாக ட்ரெய்லரைக்கொண்டே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கறிவிருந்து வைத்தார் லோகேஷ். ட்ரெய்லர் தொடங்கியதில் இருந்தே விஜய் சேதிபதியை பார்ப்பதா, ஃபகத் பாசிலை பார்ப்பதா, ட்ரெய்லரில் வரும் வசனங்களை கவனிப்பதா இவையெல்லாம் தாண்டி உலக நாயகனை ரசிப்பதா என்று குழம்பிய ஆடியன்ஸ், ஒவ்வொருவருக்காகவும் மீண்டும் மீண்டும் பார்த்து பரவசமடைந்தனர். இதன் விளைவாக ஒரே நாளில் 1 கோடியே 20 லட்சம் viewsகளை கடந்து நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது விக்ரம் ட்ரெய்லர். வழக்கமாக அஜித் – விஜய் போன்ற நடிகர்களுக்கு மட்டுமே நிகழ்ந்துவந்து ட்ரெண்டிங் சாதனைகளுக்கு கமலின் விக்ரம் படமும் சளைக்காமல் ஈடுகொடுத்துக்கொண்டிருக்கிறது.
இந்த ட்ரெய்லரை அலசி ஆராயும்போது படத்தின் கதை என்னவாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுவருகிறது. தன்னுடைய கைதி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியிலேயே படத்தின் அடுத்த பாகத்திற்கான lead-ஐ கொடுத்திருந்தார் லோகேஷ். கைதியின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கைதி-2 படத்திற்கான எதிர்ப்பார்ப்பு எகிறியது. மாஸ்டர் திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் மாபெரும் வெற்றியடைந்திருந்தாலும் கைதி அளவுக்கு அது இயக்குநரின் படமாக இல்லை என்றும் பேசப்பட்டது. எனவே அடுத்தாக லோகேஷ் கைதி-2வை கையில் எடுக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் விக்ரம் பக்கம் வண்டியை திருப்பினார்.
ட்ரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் பேசும்போது, ‘ சூர்யாவும் படத்துல நடிக்கிறார். கொஞ்சம் லேட்டா சொல்லலாம்னு இருந்தோம் எப்படியோ லீக் ஆகிடுச்சி’ என்று பேசியிருக்கிறார். சூர்யா நடிக்கிறார் என்ற தகவலோட கைதி படத்தின் கதைக்களத்தில் தான் விக்ரமும் பயணிக்கிறது என்ற தகவலும் வந்திருந்தது. சூர்யா நடத்த சிறிய காட்சியில் கைதியில் வில்லனாக வந்த அர்ஜுன் தாஸ், உத்தமன் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள் என்ற தகவலும் வெளிவந்திருந்தது. விக்ரமின் ட்ரெய்லரில், ஒருவர் கருந்தேள் படம் பொறித்த மூட்டைகளை தூக்கி செல்லும் காட்சி இடம்பெற்றிருந்தது. அப்போது ‘என் சரக்கு கிடைச்சிருச்சினா உன் கவர்ன்மெட்டுக்குள்ள நான் வர தேவையில்ல.. என் கவர்ன்மெட்டை என்னால உருவாக்க முடியும்’ என்று விஜய் சேதுபதி பேசும் வசனங்களும் இடம்பெற்றிருந்தது.
கைதி படத்திலும் வில்லன்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் மூட்டைகளின் இதே கருந்தேளின் படங்கள்தான் இடம் பெற்றிருக்கும். மேலும், கைதியில் போலீஸாக வந்த நடிகர் நரேன் விக்ரமில் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நடிகர் கமல் ஒரு சிறைக்குள் இருந்து நரேனுடம் வெளியேறும் காட்சிகள் முன்பு வெளியாகியிருந்த first glace-ல் இடம்பெற்றிருந்தது.
இதை வைத்து பார்க்கும் போது கைதி படத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைன் மூட்டைகளை மீட்கும் முயற்சியில் வில்லன்கள் ஈடுபடுகிறார் எனவும், ஏதோ ஒரு வகையில் இவர்களால் பாதிப்புக்குள்ளாக கமல் வில்லன்களுடன் போர் தொடுப்பதுதான் விக்ரம் படத்தின் கதைக்கருவாக இருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கைதி-2 விற்கான தொடக்கமும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. ட்ரெய்லரின் இறுதியில் ‘விக்ரம்..விக்ரம்’ என்று கமல் அழைப்பதால் ‘ விக்ரம் என்பது அதில் வரும் ஒரு சிறுவனின் பெயராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மதுபாட்டில் உடையாமல் சண்டை காட்சியில் ஈடுபடும் கமலின் கதாப்பாத்திரம் மாஸ்டரின் JD போன்ற மதுக்கு அடிமையானவராக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராவான சண்டைக்காட்சிகள், டிசைன் டிசைனான துப்பாக்கி சூடுகள், விஜய் சேதுபதியின் புதிய அவதாரம், ஃபகத் பாசிலின் மிரட்டல் நடிப்பு, உலக நாயகனின் உற்சாக நடிப்பு என வெறித்தனமாக வெளியாகியிருக்கும் ட்ரெய்லரை பார்த்து ஆடியன்ஸும் கமல் ஸ்டைலில் ‘விக்ர…ம் விக்ர…ம்’ எனப் பாடிக்கொண்டே படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
- வேல் பிரசாந்த்










