இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பில், அமேசான் ப்ரைமில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ’ஷெர்னி’. ஒரு பெண் வனத்துறை அதிகாரியின் அனுபவத்தைப் பேசுகிறது இத்திரைப்படம். அபர்ணா என்ற பெண் வனத்துறை அதிகாரியின் வாழக்கையை தழுவி இத்திரைப்படம் எடுக்கப்படுள்ளது. நடிகை வித்யா பாலன் வித்தியாசமான கதைக்களங்களைத் தொடர்ந்து தேர்வு செய்து நடித்துவருகிறார். இந்த வரிசையில் தற்போது, பெண் வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் படம் ஷெர்னி.

யார் இந்த அபர்ணா?
வனத்துறையில் சுமார் 14 ஆண்டுகள் ஆண்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டனர். 1980-களுக்கு பிறகுதான் பெண்கள் இத்துறையில் பணிகளில் அமர்த்தப்படுகின்றனர். தற்போது வனத்துறையில் சுமார் 284 பெண் அதிகாரிகள் பணியில் உள்ளனர். மேலும் 5,000 பெண் முன் களப்பணியாளர்கள் உள்ளனர். இதுபோன்று ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில், சத்தமே இல்லாமல் சாதனை படைத்திருக்கிறார் அபர்ணா.
2013 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை மகாராஷ்டிரா வனத்துறை அதிகாரியாகப் பணி வகித்து வருகிறார் அபர்ணா. இவர் பணியிலிருந்தபோது , மகராஷ்டிராவில் ’அவ்னி’ என்ற பெண் புலி, தொடர்ந்து 13 பேரை அடித்துக் கொன்றது. அந்த புலியைக் கொன்ற நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டார் இவர்.
மகாராஷ்டிராவின் பந்தர்கவுடா வனப்பகுதியில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்
ஏற்பட்ட மோதலை இவர் சரியாகக் கையாண்டார். மேலும் பெண் வனக்காவலர்கள் குழுக்களை உருவாக்கி, வனத்திற்கு அருகாமையில் இருக்கும் கிராம மக்களோடு தொடர்பில் இருக்கும்படி செய்தார்.
இதன் மூலம் 24 மணிநேரமும் வன விலங்களை அவர் கண்காணித்தார்.
மகாராஷ்டிராவில் பணி அமர்த்தப்படுவதற்கு முன்பு, இவர் மத்திய வனச்சரகத்திற்கு உற்பட்ட காசிரங்கா தேசியப் பூங்காவின் பொறுப்பு அதிகாரியாக இருந்தார். இந்த பூங்காவில் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இவர் பொறுப்பிலிருந்தபோது, காண்டாமிருகத்தை வேட்டையாடுவதை முடிவுக்குக் கொண்டுவந்தார். மேலும் சட்டவிரோதமாக மீன் பிடிப்பதைக் கட்டுப்படுத்தினார். மேலும் 2016-17 காலகட்டத்தில் இப்பகுதியில் நெகிழியைப் பயன்படுத்தத் தடை விதித்தார்.







