Home Work – செய்யுங்கள் என காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கர் அறிவுரை கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில், குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளாதது அவமானம் என காங்கிரஸ் எம்.பி கே.சி. வேணுகோபால் ராஜ்யசபாவில் பேசுகையில் குறிப்பிட்டார்.
இதற்கு மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தன்கர் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக ஜக்தீப் தங்கர் பேசியதாவது:
குடியரசு தலைவருக்கும் துணைக் குடியரசுத் தலைவருக்கும் நாட்டில் மிக உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அரசியலமைப்பு மீறல் எதுவும் நடக்கவில்லை. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பொறுப்புகளை அதற்குரிய இடத்தில் வைத்து பார்க்க வேண்டும்.
முன்னணி எதிர்கட்சி உறுப்பினராக உள்ள நீங்கள் அரசியலமைப்பை முழுமையாக படிக்க வேண்டும். HOME WORK செய்து இதை கண்டறிந்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் குடியரசுத்தலைவர் உரையாற்றுவார் என்றே முதலில் அரசியலமைப்பில் இருந்தது.
பின் குடியரசுத் தலைவர் ஆண்டுக்கு ஒரு முறைதான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட முதல் திருத்தத்தில் மாற்றப்பட்டது. இவ்வாறு துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர் பேசினார்.







