குடியரசு துணை தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளர் அமரீந்தர் சிங்?

குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. குடியரசு துணை தலைவர் வெங்கைய்யா நாயுடுவின்…

குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

குடியரசு துணை தலைவர் வெங்கைய்யா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு வரும் 19ந்தேதி கடைசி நாளாகும்.

ஒரு புறம் குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவை வெற்றி பெறச் செய்ய தீவிர  முயற்சி மேற்கொண்டு வரும் பாஜக, மறுபும் குடியரசு துணை தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அமிரீந்தர் சிங் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. பஞ்சாப் காங்கிரசின் அடையாளமாக நீண்ட நாட்களாக விளங்கிய அமிரீந்தர் சிங், அக்கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மனக் கசப்பால், காங்கிரசிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்கிற புதிய கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சி கடந்த சட்டப்பேரவை  தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டது. தேர்தலில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாத நிலையில் பஞ்சாப் வோக் காங்கிரசை பாஜகவுடன் இணைத்துவிடலாம் என அமிரீந்தர் சிங்கிற்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில் தற்போது லண்டனில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கும் அமிரீந்தர் சிங் அங்கிருந்து திரும்பியதும் தமது கட்சியை பாஜகவுடன் இணைப்பார் எனக் கூறப்படுகிறது.அதன் பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அமிரீந்தர் சிங் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.