பாஜகவை ஆதரிக்கும் காங். தலைவர் – பிரியங்காவுக்கு ‘சாரி’ சொன்னது ஏன்?

உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் காசிம் அலி கான் தெரிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான், சமீபத்தில் நடைபெற்ற…

உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் காசிம் அலி கான் தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான், சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, ராம்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு வரும் 23ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அக்கட்சியின் மாநில தலைவர்களில் ஒருவரான நவாப் காசிம் அலி கான் விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும், இந்த தேர்தலில் போட்டி இல்லை என காங்கிரஸ் அறிவித்துவிட்டது.

 

 

பிரியாங்காவுக்கு ‘சாரி’

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச பொறுப்பாளரான பிரியங்கா காந்திக்கு கடிதம் எழுதியுள்ள நவாப் காசிம் அலி கான், தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியினர் சுந்திரமாக வாக்களிக்கலாம் என்பதால், தான் பாஜக வேட்பாளர் கன்ஷியாம் சிங் லோதிக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாகக் கூறியுள்ளார். அதேநேரத்தில், தான் காங்கிரஸ் கட்சியில் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாயாவதி முதலமைச்சராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் அமைச்சராகவும், 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த நவாப் காசிம் அலி கானின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரது இந்த அறிவிப்பை அடுத்து, நவாப் காசிம் அலி கானை சந்தித்த பாஜக வேட்பாளர் கன்ஷியாம் சிங் லோதி, அவருக்கு நன்றி தெரிவித்தார்.

ஆசம் கானின் பரமவைரியாக கருதப்படுபவர் நவாப் காசிம் அலி கான். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஆசம் கானை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.