முக்கியச் செய்திகள் தமிழகம்

மாநில அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநில அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

 

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, ரகுபதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மெய்யநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

நான் முதல்வன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் சிறந்த இடத்தைப் பிடிப்பது, பாடத்திட்ட மாற்றம், மாநில கல்விக்கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதுமைப் பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துதல், பேராசிரியர்கள் – மாணவர்கள் விகிதத்தை சரியாக கடைபிடித்தல் உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

 

இதையடுத்து, மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழகங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.3,000 கோடி ஒதுக்கப்படுகிறது என்றார். இதுவே பல்கலைக்கழகங்கள் சிறப்பாக செயல்படக் காரணம் என கூறினார். உயர்கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற அவர், நீதிக்கட்சி ஆட்சியில் கல்விக்காக போட்ட விதையே இன்று கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாக காரணம் என்றார்.

 

அனைவருக்கும் கல்வி, தகுதிக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதிக உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. வேலைவாய்ப்பு தருவது மட்டும் உயர்கல்வியின் நோக்கமல்ல என்ற முதலமைச்சர், இப்போதும் உயர்ந்து தான் இருக்கிறோம். ஆனால் இது போதாது, இன்னும் உயர வேண்டும் என்றார்.

 

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 51% பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும். உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, கற்றல் – கற்பித்தல் போன்றவற்றில் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் சிறப்பாகவே உள்ளன. NIRF தரவரிசையிலும் நாம் தான் முதலிடம் என பெருமிதம் தெரிவித்தார். எண்ணிக்கை, தரம் என்ற இரண்டிலும் தமிழ்நாடு உயர்ந்துள்ளது என்பதை NIRF தரவரிசைப் பட்டியல் காட்டுகிறது.

வரும் ஆண்டுகளில் NIRF தரவரிசையில் அதிக உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெறும். தமிழ்நாட்டில் உயர்கல்வி சேரும் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தரம் குறைந்துவிட்டது என்பதை ஏற்க முடியாது. ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அனைவரும் உயர்கல்வி பயில பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சிக் கல்வி என்பதே இலக்கு என்றார்.

 

ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த ஆண்டுதோறும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும். தொழில் நிறுவனங்களுடன் இணைந்து Faculty Development Program செயல்படுத்தப்படும். பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு தேவையான உதவியை வழங்க அரசு தயாராக உள்ளது. மாநில அரசின் கொள்கைகளுக்கேற்பவே பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்.

 

மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும். நீட் தேர்வுக்கு பயந்து அதை எதிர்க்கவில்லை. உயர்கல்விக்கு தடைக்கல்லாக இருக்கும் என்பதால் தான் அதை எதிர்க்கிறோம். புதிய தேசிய கல்விக்கொள்கையையும் அரசு எதிர்க்கிறது. புதிய பாடங்கள், படிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள பாடங்களை கற்க வேண்டும். புதிய பாதையை அமைத்துத்தர வேண்டும் என்ற அவர், உயர்கல்வியின் பொற்காலமாக இந்த ஆட்சி இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேயிலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை-சீமான் வலியுறுத்தல்

Web Editor

கடும் எதிர்ப்புகளை மீறி 100 நாடுகளில் 2500 திரையரங்குகளில் வெளியான “பதான்” படம்

Web Editor

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இலங்கை இளைஞர்கள் கைது

Web Editor