பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் சமூக தணிக்கை கட்டாயம்- மத்திய அரசு விளக்கம்

பிரதமர்  நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தில் முறைகேடுகளை தவிர்க்க சமூகத் தணிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற வீட்டு வசதித்துறை இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் எழுப்பிய…

பிரதமர்  நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தில் முறைகேடுகளை தவிர்க்க சமூகத் தணிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற வீட்டு வசதித்துறை இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர்  கௌஷல் கிஷோர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

ஒன்றிய அரசு நகர்ப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்துக்கான நிதி வேறு திட்டங்களுக்கு மடை மாற்றப்படுகிறதா என்பதை அறிய… இத்திட்டத்தின் செயல்பாடுகள்  பற்றி சமூகத் தணிக்கை நடத்தப்பட்டிருக்கிறதா? அவ்வாறு ஆய்வு செய்திருந்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் இத்திட்டத்தின் செயல்பாடுகளைப் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும்,  அவ்வாறு சமூகத் தணிக்கை செய்யப்படவில்லை என்றால் அதற்கான காரணத்தை கூறவேண்டும்” என்று திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி  மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தக் கேள்விகளுக்கு மத்திய  நகர்ப்புற வீட்டு வசதித்துறை இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், பிரதம மந்திரியின் நகர்ப்புற  வீட்டு வசதி திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி  வீடு கட்டுவதற்கான  மூன்றாவது தவணை நிதி  விடுவிக்கப்படுவதற்கு முன் இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிய சமூகத் தணிக்கை செய்யப்படுவது கட்டாயமாகும் எனக் கூறியுள்ளார்.

இந்த சமூகத் தணிக்கை மூலமாக இந்தத் திட்டத்தின் நடைமுறை மற்றும் பலன்கள் உரிய வகையில் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க முடிகிறது என்று தெரிவித்துள்ள கௌஷல் கிஷோர், மேலும் சமூகத் தணிக்கையானது இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்துதல், அதிகாரிகள் மற்றும் பயனாளிகளின் பொறுப்புத் தன்மையை உறுதி செய்தல், வெளிப்படைத் தன்மை ஆகியவற்றில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பிரதம மந்திரி நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் சமூக தணிக்கை பற்றிய விவரங்கள்   https://www.mohua.gov.in/upload/uploadfiles/files/7PMAY_Social_Audit_Guidelines_2017$2017Apr25181455.pdf என்ற இணைய முகவரியில் காணக் கிடைக்கின்றன என்றும் சமூகத் தணிக்கை செய்வதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு  இத்திட்டத்தில் இருந்து ஒன்றிய அரசு முழு நிதியுதவி செய்கிறது என்றும் மத்திய இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் தெரிவித்துள்ளார்.  இதுவரை பிரதம மந்திரி  நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ்  தமிழ்நாடு, ஆந்திரா, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம்,  நாகாலாந்து, ஒடிசா, புதுச்சேரி, திரிபுரா, உத்திரப்பிரதேசம், உத்தர்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சமூகத் தணிக்கை செய்வதற்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது” என்றும் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கு அளித்துள்ள பதிலில் மத்திய  நகர்ப்புற வீட்டு வசதித்துறை இணை அமைச்சர் கௌஷல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.