காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்த கோமாளிகளால் தங்கள் சொந்த பிரச்னையை தீர்த்து கொள்ள முடியாது என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையை தீர்க்க கர்நாடக அரசுக்கு பிரதமர் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளபடி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்கவும் கர்நாடக அரசுக்கு பிரதமர் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இதனை உறுதி செய்வதற்கு தேவையான அறிவுரைகளை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சகத்திற்கும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:“காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ளன. தங்கள் வாரிசுகளை காப்பதற்காகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் அவர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர். அவர்களுக்கு உள்ள பிரச்னை தொடர்பாக (காவிரி விவகாரம்) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார்.
ஏனென்றால் அவர்களால் பிரச்னையை தீர்த்துக்கொள்ள முடியாது. தங்களுக்குள் உள்ள சொந்த பிரச்னையை தீர்த்துக்கொள்ள முடியாத இந்த கோமாளிகள், மக்கள் பிரச்னையை எப்படி தீர்ப்பார்கள்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.






