நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவையிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டப்பேரவை ஆகியவற்றில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மசோதாவை நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் ஒதுக்கப்பட்ட இடங்கள் மாற்றப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மசோதா கடந்த 1996-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டதாகும். குறிப்பாக, இந்த மசோதாவை தற்போது எதிர்கட்சிகள் உள்பட பல கட்சிகள் ஆதரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 27 ஆண்டுகளாக மத்தியில் மாறி மாறி அமையும் அரசுகளால் இந்த மசோதா அறிமுகமாகி தோல்வியை தழுவி வந்தது.
மத்தியில் இருக்கும் அரசாங்கத்திற்கு போதிய உறுப்பினர்கள் பலம் இல்லாதது; ஒருமித்த கருத்தை எட்ட வைக்க தவறியது போன்ற பல்வேறு காரணங்கள் இந்த தோல்விகளுக்கு பின்னால் இருக்கின்றன. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அதிகப்படியான உறுப்பினர்களை வைத்து பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் பாஜக, இந்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 9 ஆண்டுகளாக மோடி அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்யவில்லை. இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தபோதிலும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.