சர்வதேச அளவில் அகதிகளின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் 10 கோடியை கடந்திருப்பதாக ஐநா அகதிகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஐநா அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக அகதிகளின் எண்ணிக்கை முதல்முறையாக 10 கோடியை கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எத்தியோப்பியா, புர்கினா ஃபாசா, மியான்மர், நைஜீரியா, ஆப்கனிஸ்தான், காங்கோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறிய மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில் 9 கோடியாக இருந்ததாகத் தெரிவித்துள்ள ஐநா அகதிகள் அமைப்பின் தலைவர் ஃபிலிப்போ கிரான்டி, நடப்பாண்டில் உக்ரைன் போர் காரணமாக 1.6 கோடி மக்கள் இடம் பெயர்ந்ததால் இந்த எண்ணிக்கை 10 கோடியை கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய அபாயத்தை இந்த எண்ணிக்கை உணர்த்துவதாகத் தெரிவித்துள்ள ஃபிலிப்போ கிரான்டி, மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் முன்வர வேண்டிய தருணம் இது என கூறியுள்ளார்.
பாதுகாப்பு கருதி உள்நாட்டுக்கு உள்ளேயே இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை கடந்த 2020ல் 5.41 கோடியாக இருந்ததாகத் தெரிவித்த ஃபிலிப்போ கிரான்டி, அது தற்போது 5.91 கோடியாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.