அமைச்சர் பொன்முடி வீட்டில் கணக்கில் வராத ரூ.81.7 லட்சம் பறிமுதல்! வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கம்!! – அமலாக்கத்துறை விளக்கம்!!!

அமைச்சர் பொன்முடி வீட்டில் கணக்கில் வராத ரூ.81.7 லட்சம் பணமும், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவரது வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை…

அமைச்சர் பொன்முடி வீட்டில் கணக்கில் வராத ரூ.81.7 லட்சம் பணமும், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவரது வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று காலை முதல்  அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த சோதனை குறித்து அமலாக்கத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி மற்றும் அவரது மகனும்  நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் அமலாக்கத் துறை 17/07/2023 அன்று சோதனை மேற்கொண்டது.

சுரங்கத்துறை அமைச்சராக இருந்த போது பொன்முடி தனது மகன், உறவினர்கள் மற்றும் பினாமிதாரர்களுக்கு சட்டவிரோதமாக 5 இடங்களில் செம்மண் குவாரிகளுக்கான உரிமம் வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. சட்டவிரோத சுரங்கத்தில் இருந்து பெறப்பட்ட வருமானம் பினாமி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டது. இறுதியில், இந்தோனேசியாவில் PT Excel Mengindo மற்றும் UAE இல் M/s யுனிவர்சல் பிசினஸ் வென்ச்சர்ஸ் FZE ஆகிய இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தோனேசிய நிறுவனம், அடிப்படை தொகையான ரூ. 41.57 லட்சத்திற்கு வாங்கப்பட்டு, பின்னர் ரூ. 2022ல் 100 கோடி ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவதில் ஹவாலா மூலம் பெரும் தொகை பரிமாற்றம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் சோதனை நடத்திய போது கணக்கில் வராத ரூ. 81.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது, ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையைத் தவறாக வழிநடத்தும் விதமாக, அந்த தொகை குடும்பத்திற்குச் சொந்தமான மருத்துவமனை வாயிலாக பெறப்பட்டதாக கூறப்பட்டது, மேற்கண்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்பட்டது. எனவே, பொன்முடி வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்த கணக்கில் வராத தொகைக்கு நம்பத் தகுந்த விளக்கம் எதுவும் இல்லை.

அமலாக்கத்துறையின் தொடர் விசாரணையில், சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்ததற்கான முகாந்திரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.பல்வேறு குற்றச் சாட்டு ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டு தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் வங்கி கணக்கில் இருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.41.9 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதோடு தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.