ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 3 வது நாளாக தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையும் விதித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நார்வே, அயர்லாந்து, அல்பேனியா, கேபான், மெக்சிக்கோ, பிரேசில், கானா, கென்யா ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இருப்பினும், ரஷ்யா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 11 நாடுகளின் ஆதரவு தீர்மானத்தை முறியடித்தது. இதனால், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐநாவின் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.








