பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யுகேஜி சிறுமியை ஃபெயிலாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை அடுத்துள்ள அனேக்கல் அருகே தீபஹள்ளியில் செயின்ட் ஜோசப் சாமினேட் அகாதெமி பள்ளி உள்ளது. இப்பள்ளியில் யுகேஜி படித்த சிறுமி நந்தினி தேர்வில் தோல்வி அடைந்ததாக அப்பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, அச்சிறுமியின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, நந்தினி ஒரு பாடத்தில் 160 மதிப்பெண்ணுக்கு 100 மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்ததால் தோல்வி அடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அச்சிறுமியின் தந்தை மனோஜ் ஃபாதல், 6 வயது குழந்தையை தேர்வில் தோல்வி அடையச் செய்துள்ளது சரியான அணுகுமுறை கிடையாது. இதனால், குழந்தை மனதளவில் பாதிக்கப்படுவார். இந்த விஷயத்தை பள்ளி நிர்வாகத்தினர் சரியாக கையாளவில்லை. பள்ளித் தாளாளரிடம் பேசியதையடுத்து, தேர்வு முடிவை பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளனர் என்றார்.ஞ
ஆனேக்கல் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி கூறியதாவது: இச்சம்பவம் குறித்து 2 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்து பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறினார்.
-ம.பவித்ரா







